பிச்சைக்காரன் 2 ரிலீஸ் தள்ளிப்போனதால் மிகப்பெரிய நஷ்டம்... மன வேதனையில் விஜய் ஆண்டனி
பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால் தான் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி வேதனை தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீசான பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. சசி இயக்கிய இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவித்தார் விஜய் ஆண்டனி. அப்படத்தில் நடிப்பதோடு மட்டுமின்றி அதனை தயாரித்து, இசையமைத்து, அப்படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
பிச்சைக்காரன் 2 படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியபோது மலேசியாவில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் விஜய் ஆண்டனி. கடந்த ஜனவரி மாதம் விபத்தில் சிக்கிய அவர் படுத்தபடுக்கையாக இருந்தார். இதையடுத்து தீவிர சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறியவுடன் மீண்டும் பிச்சைக்காரன் பட பணிகளில் பிசியானார் விஜய் ஆண்டனி. இப்படத்தை தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட நடிகையை தரதரவென இழுத்துச் சென்ற கணவர்... இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ
ஆனால் திடீரென மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் ராஜகணபதி என்பவர் பிச்சைக்காரன் 2 படத்தின் மீது கதை திருட்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தனது தயாரிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஆய்வுக்கூடம் படத்தின் கருவையும், வசனத்தையும் திருடி தான் பிச்சைக்காரன் 2 படம் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி இப்படத்திற்கு தடை விதிப்பதோடு தனக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் விஜய் ஆண்டனி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஆய்வுக்கூடம் படத்தை தான் பார்த்தது கூட கிடையாது என்றும், வழக்கு தொடர்ந்த பின்னர் தான் அப்படத்தை பார்த்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அப்படத்திற்கும் பிச்சைக்காரன் 2 படத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் படம் வெளியாவதை தடுக்கும் நோக்கத்தில் தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால் தனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதோடு மன உளைச்சலும் அடைந்துள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 25-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்... ராஜ ராஜ சோழன் இந்துவா? வெற்றிமாறனால் கிளம்பிய சர்ச்சைக்கு முதன்முறையாக விளக்கம் அளித்த மணிரத்னம்