ராஜ ராஜ சோழன் இந்துவா? வெற்றிமாறனால் கிளம்பிய சர்ச்சைக்கு முதன்முறையாக விளக்கம் அளித்த மணிரத்னம்
ராஜ ராஜ சோழன் இந்து மதத்தை சேர்ந்தவராக பொன்னியின் செல்வன் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது குறித்து மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.
மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆனது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வனை மையமாக வைத்து தான் இப்படத்தை எடுத்திருந்தார் மணிரத்னம். இப்படம் ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் மழை பொழிந்தது.
பொன்னியின் செல்வன் வெற்றிப்படமாக அமைந்தாலும், அப்படம் குறித்து சில சர்ச்சைகளும் எழுந்தன. அதில் ஒன்று தான் ராஜ ராஜ சோழன் இந்துவாக சித்தரிக்கப்பட்டுள்ளார் என்கிற சர்ச்சை. பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் ஆன போதே இந்த சர்ச்சை எழுந்தது. இதற்கு காரணம் அந்த சமயத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன், ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக காட்டி அதன்மூலம் நமது அடையாளங்கள் பறிக்கப்பட்டு வருவதாக கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... இன்னும் ஏகே 62 பஞ்சாயத்தே முடியல... அதற்குள் ஏகே 63 படத்தின் இயக்குனரை புக் செய்த அஜித் - அடடே இவரா!
அவரின் இந்த பேச்சு பூதாகரமானதை அடுத்து இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்களும் எழுந்து வந்தன. ஆனால் பொன்னியின் செல்வன் படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்தனர். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 பிரஸ்மீட்டில் ராஜ ராஜ சோழன் இந்து கடவுளாக சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளதே அதுகுறித்து உங்கள் கருத்து என்ன என இயக்குனர் மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
எதுக்கு இந்த கேள்வி என சற்று டென்ஷன் ஆன மணிரத்னம், தொடர்ந்து பேசியதாவது : “பொன்னியின் செல்வன் புனையப்பட்ட கதாபாத்திரங்களுடன் கூடிய ஒரு வரலாற்று கதை. அதில் எதற்கு மதத்தை பற்றியெல்லாம் கொண்டு வருகிறீர்கள். ராஜ ராஜ சோழன் ஆட்சிகாலத்தில் அவர் செய்த செயல்களையும், சாதனைகளையும் நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். இது கல்கி எழுதியதை வைத்து பண்ணிய படம். அதனால் இதில் தேவையில்லாத சர்ச்சைகள் தேவையில்லை” என கூறினார்.
இதையும் படியுங்கள்... சோழர்களைப் பற்றி படம் எடுத்துட்டு தஞ்சாவூர் பக்கமே போகாதது ஏன்? - உண்மையை போட்டுடைத்த பொன்னியின் செல்வன் டீம்