'ரோமியோ' படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டோனி! இவரின் ஜூலியட் யார் தெரியுமா?
விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனமான ‘குட் டெவில்’ தனது முதல் படமான ரோமியோ படத்தை அறிவித்துள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி ரொமான்டி ஹீரோவாக நடிக்கிறார்.
தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளரான விஜய் ஆண்டனி தற்போது பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக் கொடுக்கும் நடிகராக மாறியுள்ளார். அவரது திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்து அவரை பாக்ஸ் ஆஃபிஸ் நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது.
இசையமைப்பாளராக இருந்து நடிகராகி பின்பு இயக்குநரான விஜய் ஆண்டனி இப்போது தயாரிப்பிலும் கால் பதிக்கும் விதமாக தனது புதிய தயாரிப்பு நிறுவனமான ‘குட் டெவில்’ லைத் தொடங்கியுள்ளார். 'குட் டெவில்’ நிறுவனம் ஆர்வமும் திறமையும் உள்ள புது இயக்குநர்களுக்கு மட்டுமல்லாது மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிக்கும் களமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
’குட் டெவில்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் வெளியாகும், பான் இந்தியன் லவ் டிராமா திரைப்படத்திற்கு ‘ரோமியோ' எனத் பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடிக்கின்றனர். இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் ‘கணம்’ படத்தில் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்கிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இதுமட்டுமல்லாது, விளம்பரப் பட இயக்குநரான இவர், ’காதல் டிஸ்டன்சிங்’ என்ற யூடியூப் தொடர் மற்றும் ’ஐ ஹேட் யூ ஐ லவ் யூ’வின் எபிசோட் 3 ஐ இயக்கியுள்ளார்.
இந்தப் படம் மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது. மேலும் மலேசியா, பாங்காக், ஹைதராபாத், பெங்களூர், தென்காசி மற்றும் மகாபலிபுரம் ஆகிய அழகிய இடங்களிலும் படமாக்கப்பட உள்ளது. படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ‘லவ் குரு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் தெலுங்கு பிராந்தியங்களில் விஜய் ஆண்டனியின் வர்த்தக மதிப்பு அபரிமிதமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது மற்றும் தயாரிப்பைத் தவிர, விஜய் ஆண்டனி படத்தொகுப்பையும் கவனித்து வருகிறார். இவர் ஏற்கனவே ’அண்ணாதுரை’, ’திமிரு புடிச்சவன்’, ’கோடியில் ஒருவன்’, ’பிச்சைக்காரன் 2’ ஆகிய படங்களில் தனது எடிட்டிங் திறமையை நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரோமியோவாக நடிக்கும் விஜய் ஆண்டனியுடன்... இந்த படத்தில் ஜூலியட்டாக மாறி, ரொமான்ஸ் பண்ண உள்ளது மிருணாளினி ரவி என்பதால் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு பரத் தனசேகர் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.