பூஜைக்கு பின் பிரிந்த உயிர்; கலங்க வைக்கும் சரோஜா தேவியின் கடைசி நிமிடங்கள்!
நடிகை பி. சரோஜா தேவி இன்று காலமானார். அவரது இறுதி நிமிடங்கள் எப்படி இருந்தன? என்பது பற்றி அவரது மேலாளர் தெரிவித்திருக்கிறார்.

Saroja Devi last minutes
'அபிநய சரஸ்வதி' எனவும், 'கன்னடத்துப் பைங்கிளி' எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை சரோஜாதேவி. அவர் இன்று காலமானார். தனது நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த சரோஜா தேவி, 70 ஆண்டுகளாக சினிமாவில் கோலோச்சினார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், 2019 இல் வெளியான 'சார்வபௌம' படத்தில் கடைசியாக நடித்தார். அதன்பின்னர் வயது மூப்பு காரணமாக சினிமாவில் நடிக்கவில்லை. பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார் சரோஜா தேவி. கடந்த 1938ம் ஆண்டு ஜனவரி 7ந் தேதி பிறந்த இவருக்கு வயது 87.
சரோஜா தேவி மறைவுக்கு முன் என்ன செய்தார்?
நடிகை சரோஜா தேவி இன்று காலை வழக்கம்போல் பூஜை செய்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் உயிர் பிரிந்தது. 'தினமும் காலையில் எழுந்தவுடன் செய்தித்தாள் படிப்பார். பின்னர் குளித்துவிட்டு பூஜை செய்வார். அதன் பிறகே காலை உணவு உண்பார். இன்றும் வழக்கம்போல் பூஜை செய்துவிட்டு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்' என்று அவரது மேலாளர் விஜயகுமார் தெரிவித்தார்.
சரோஜா தேவியின் உடல் எங்கே அடக்கம் செய்யப்படும்?
சரோஜா தேவிக்கு அவரது தாய் மீது அதீத பிரியம். இதனால் அவரின் தாயார் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் பிறந்த சரோஜாதேவியின் தந்தை பெயர் பைரப்பா. அவர் ஒரு காவல் அதிகாரி. அவரின் தாயார் பெயர் ருத்ரம்மா. சரோஜா தேவி நடனம் கற்றுக்கொள்ள அவரது தந்தை தான் ஊக்கப்படுத்தினார். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே, பொறியாளர் ஸ்ரீ ஹர்ஷாவை கடந்த 1967ம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இந்திரா மற்றும் கௌதம் ராமச்சந்திரன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 1986 இல் கணவர் மாரடைப்பால் இறந்த பிறகு கடும் மன அழுத்தத்துக்கு ஆளானதாக சரோஜா தேவி கூறியிருந்தார்.
சரோஜா தேவி இறுதிச்சடங்கு எப்போது?
சரோஜா தேவிக்கு ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவரும் சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அவரது நினைவாக புவனேஸ்வரி விருது வழங்கி வந்தார். சரோஜா தேவியின் இறுதிச்சடங்குகள் கொடிக்கெஹள்ளியில் உள்ள அவர்களது தோட்டத்தில் நடைபெறும். இந்தி சினிமாவிலும் திலிப் குமார், ராஜேந்திர குமார், ஷம்மி கபூர், சுனில் தத் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதன் மூலம் நான்கு மொழிகளில் நடித்த முதல் கன்னட நடிகை என்ற பெருமையைப் பெற்றார் சரோஜா தேவி. இவர் தமிழில் எம்ஜிஆருக்கு ஜோடியாக 26 படங்களிலும் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக 22 படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.