- Home
- Cinema
- அம்மாவுக்கு செய்துகொடுத்த சத்தியம்; ராஜீவ் காந்திக்கே நோ சொன்ன சரோஜா தேவியின் துணிச்சல் முடிவு
அம்மாவுக்கு செய்துகொடுத்த சத்தியம்; ராஜீவ் காந்திக்கே நோ சொன்ன சரோஜா தேவியின் துணிச்சல் முடிவு
கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சரோஜா தேவி, இன்று மரணமடைந்த நிலையில், அவரைப்பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Saroja Devi Brave decision
1960களில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் சரோஜா தேவி. அந்த காலகட்டத்தில் முக்கிய நடிகர்களாக இருந்த ஜெமினி கணேசன், எம்ஜிஆர், முத்துராமன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்த சரோஜா தேவி, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சரோஜா தேவி சினிமாவில் நுழையும் போதே தன்னுடைய தாயாருக்கு ஒரு சத்தியம் செய்துகொடுத்தாராம். அந்த சத்தியத்தை கடைசிவரை சரோஜா தேவி மீறவில்லை. அது என்னவென்றால் சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், அதேபோல் பிகினி உடையில் நடிக்க மாட்டேன் என சத்தியம் செய்துவிட்டு தான் சினிமாவில் நடிக்க வந்தாராம் சரோஜா தேவி. அந்த பாலிசியை கடைசி வரை கடைபிடித்திருக்கிறார்.
தமிழ் படங்களில் நடித்தது பிறவிப்பயன் - சரோஜா தேவி
1965-க்கு பிறகு ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா வந்த பின்னர் தான் சரோஜா தேவியின் மார்க்கெட் சரியத் தொடங்கி இருக்கிறது. இதனால் 1967-ம் ஆண்டு ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்துகொண்ட சரோஜா தேவி, குழந்தை பெற்ற பின்னர் கணவரின் அனுமதியோடு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். அவரின் 100வது திரைப்படம் பெண் என்றால் பெண் என்கிற தமிழ் திரைப்படம். அப்போது அளித்த பேட்டியில் தமிழ் படங்களில் நடித்தது தன்னுடைய பிறவிப்பயன் என உணர்வுப்பூர்வமாக பேசி இருந்தார் சரோஜா தேவி.
அபிநய சரஸ்வதி சரோஜா தேவி
இவர் நடித்த ஒரே ஒரு படம் மட்டும் பாதியிலேயே கைவிடப்பட்டது. அந்த படத்தின் பெயர் சாட்டையடி. இப்படத்தில் ஜெய் சங்கர் உடன் நடித்து வந்தார் சரோஜா தேவி. அப்போது குழந்தை பிறக்க இருந்ததால் அவரால் அப்படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. இதானல் அப்பத்தை பாதியிலேயே கைவிட்டனர். சரோஜா தேவி, அபிநய சரஸ்வதி என்கிற பெயரை பெற்றதற்கு முக்கிய காரணம் அன்பே வா படத்தில் இடம்பெற்ற லவ் பேர்ட்ஸ் என்கிற பாடல் தான். அதில் கண்களை கிளி போல் அசைத்து க்யூட்டாக இவர் ஆடும் நடனம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.
சரோஜா தேவியை அரசியலுக்கு அழைத்த ராஜீவ் காந்தி
அந்த காலகட்டத்தில் சினிமாவில் கோலோச்சிய நடிகைகளுக்கு அரசியலில் இருந்து அழைப்பு வரும். அப்படிதான் சரோஜா தேவிக்கும் அரசியல் அழைப்பு வந்திருக்கிறது. ஒருமுறை ராஜீவ் காந்தி, நடிகை சரோஜா தேவியை டெல்லிக்கு அழைத்து பேசி இருக்கிறார். எம்பி பதவி தருவதாக கூறி அவரை கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் போட்டியிட சொன்னாராம். ஆனால் இதற்கு நோ சொல்லிவிட்டாராம் சரோஜா தேவி. அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்டானது.
சரோஜா தேவி அரசியலுக்கு நோ சொன்னது ஏன்?
தன்னுடைய தந்தை தனக்கு நேர்மையாக வாழ சொல்லிக்கொடுத்திருக்கிறார். அப்படி தான் வாழ்கிறேன். அதேபோல தான் வாழ விரும்புகிறேன். அரசியல் என வந்துவிட்டால் எல்லா நேரத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா என்பது தெரியவில்லை. அரசியலில் ஒரு தரப்புக்கு நல்லவராக இருந்தால், மற்றொரு தரப்புக்கு கெட்டவராக மாறிவிடுவோம். நான் எல்லாருக்குமே நல்லவளாக இருக்க விரும்புகிறேன். அதனால் தனக்கு அரசியல் வேண்டாம் என்று சொல்லி நிராகரித்திருக்கிறார் சரோஜா தேவி.