அஜித்தால் பல முறை மனைவியிடம் திட்டு வாங்கிய ஷியாம்! விஜய்யால் மிஸ்ஸான மாஸ் வாய்ப்பு... மனம் திறந்த நடிகர்!
'வாரிசு' படத்தில் விஜய்யின் சகோதரராக நடித்துள்ள, நடிகர் ஷியாம்... அவ்வப்போது பல பேட்டிகள் கொடுத்து வரும் நிலையில், நடிகர் அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது குறித்தும், அஜித்தால் மனைவியிடம் பல முறை திட்டு வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நடிகர் ஷியாம் ஹீரோவாக நடித்த போது கிடைக்காத பிரபலம், விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்துள்ளது. 'வாரிசு' படம் குறித்து பல பேட்டிகள் கொடுத்துள்ள இவர் அஜித் குறித்து கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
அஜித் சாருடன் இணைந்து நான் நடிக்கவில்லை என்றாலும், அவருடன் நெருங்கிய நட்பில் தான் இருக்கிறேன். அவரது மகளும் எனது மகளும் ஒரே பள்ளியில்தான் படிக்கிறார்கள். அதனால் அடிக்கடி பள்ளி சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அவரை பலமுறை சந்தித்து பேசி இருக்கிறேன். அவர் தனது குழந்தைகள் சம்பந்தப்பட்ட பள்ளி நிகழ்வுகள் எதையுமே தவிர்க்க மாட்டார். ஒரு பெற்றோர் எப்படி தனது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருப்பார்.
மஞ்சு வாரியருக்கு அஜித்திடம் இருந்து வந்த திடீர் அழைப்பு ஏன் தெரியுமா? வெளியான சர்பிரைஸ் தகவல்!
நான் கூட சிலமுறை பள்ளிக்கு செல்வேன்.. சில நேரங்களில் எனது மனைவி மட்டுமே குழந்தைகள் விஷயமாக பள்ளிக்கு சென்று வருவார்.. அப்போது கூட அங்கே அஜித் வந்திருப்பதை பார்த்துவிட்டு வந்து, அஜித் சாரே அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவிட்டு தனது குழந்தைகளுக்காக வருகிறார்.. நீங்கள் ஏன் வரமாட்டேன் என்கிறீர்கள் என என்னை திட்டுவார். அஜித் சாரால் அப்படி பலமுறை என் மனைவியிடம் திட்டு வாங்கி உள்ளேன்.
விஜய் சாரிடம் கூட பேசும்போது துணிவு படமும் வாரிசுடன் தான் வருகிறது என்று சொன்னபோது ஹை ஜாலி 2 படமும் வரட்டும்.. பார்ப்போம் என்று அதையும் பாசிட்டிவாகத்தான் அணுகினார்.. இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.
துணிவு படத்திலும் வில்லனாக நடிக்க முதலில் எனக்குத்தான் அழைப்பு வந்தது. ஆனால் இயக்குநர் வினோத் கேட்ட தேதிகளும் வாரிசு படத்திற்கான எனது தேதிகளும் ஒரேசமயத்தில் இருந்ததால் என்னால் துணிவு படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதேசமயம் அந்த கதாபாத்திரத்திற்காக என்னை யோசித்ததற்காக இயக்குநர் வினோத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர் என்பதால் இது தெலுங்கு படம் போலத்தான் இருக்கும் என பலரும் பேசி வந்தார்கள். ஆனால் இப்போது படத்தை பார்த்துவிட்டு அவர்கள் தங்களது கருத்தை மாற்றிக்கொண்டு இருப்பார்கள்.. வம்சியை பொறுத்தவரை தமிழை ரொம்பவே விரும்புபவர். படப்பிடிப்பில் கூட எல்லோருடனும் தமிழில்தான் பேசுவார். அவர் விஜய் ரசிகர்களை மனதில் வைத்துக்கொண்டே ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கியுள்ளார். நம் இயக்குனர்கள் விஜய்யை வைத்து உருவாக்கிய படங்களை விட இதில் அவர் இன்னும் ரசித்து ரசித்து செய்துள்ளார். படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் பெரும்பாலும் அதை உணர்வதாகவே தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் பார்க்க முடிகிறது..
அடுத்ததாக இயக்குநர் விஜய் மில்டனின் டைரக்ஷனில் நடித்து வருகிறேன். அதைத்தொடர்ந்து சோலோ ஹீரோவாக நடிக்கவுள்ள ஒரு படமும் தயாராக இருக்கிறது என்று கூறியுள்ளார் நடிகர் ஷாம்.