“வனிதா இல்லன்னா நான் இல்ல”... மருத்துவமனையிலிருந்து மீண்டு வந்தது குறித்து பீட்டர் பால் உருக்கம்...!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் நல்ல படியாக வீடு திரும்பியுள்ளார். தனக்காக பிரார்த்தித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வனிதாவின் 3 ஆவது கணவர் பீட்டர்பாலுக்கு கடந்த 24ம் தேதி நள்ளிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இதனால் மனமுடைந்த வனிதா தனது வேதனையை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அதற்கு ரசிகர்களும் நீங்கள் தைரியமான பெண்மணி, உங்கள் வாழ்க்கையில் எதுவும் தவறாக நடக்காது... எப்போதும் அப்படியே இருங்கள் அக்கா... என ஆறுதல் கூறினர்.
இதனிடையே நேற்று வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆல் இஸ் வெல்... வீட்டுக்கு வந்தாச்சு..” என பதிவிட்டிருந்தார். அதாவது கணவர் பீட்டர் பால் உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார் என்பதை தான் அப்படி கூறியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கடவுளுக்கு நன்றி கூறினார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ள பீட்டர் பால் வனிதாவின் யூ-டியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மிகவும் உருக்கமாக பேசியுள்ள அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இரண்டு நாளைக்கு முன்னாடி எனக்கு உடம்பு சரியில்லாமல் போனது, உடனடியாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் நிறைய வதந்திகள் எல்லாம் பார்த்தேன். அதை எல்லாம் நம்பாதீங்க. நான் இப்போ நல்லா இருக்கேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.
இன்னைக்கு வீட்டுக்கு வந்து நான் உங்கள் கிட்ட எல்லாம் பேசிக்கிட்டு இருக்க காரணம் வனிதா தான். 2 நாள் ஹாஸ்பிட்டலில் இருந்த போது அம்மா ஸ்தானத்தில் இருந்து பார்த்துக்கொண்டார். அப்போ தான் நினைச்சேன், நம்ம வாழ்க்கையில் எவ்வளவு விஷயங்களை மிஸ் செஞ்சியிருக்கோம் அப்படின்னு.
நான் தனியாக இருந்த காலத்தில் எங்கோ ஒரு ஓட்டலில் சாப்பிட்டு, பேச்சிலர் மாதிரி வாழ்ந்து இருக்கிறேன். அது தான் இப்ப என் உடல் நலனை பாதித்துள்ளது. ஆனால் இப்போ உண்மையான பாசம் எல்லாம் கிடைக்கும் போது, நான் கடவுளுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
வனிதா இல்லை என்றால் நான் இல்லை. சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. கடவுளுக்கும், வனிதாவிற்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன் என உருக்கமாக பேசியுள்ளார்.