டிரம்பின் 100 சதவீத வரி ஓடிடி தளங்களுக்கும் பொருந்துமா?
அமெரிக்க அதிபர் டிரம்ப், வெளிநாட்டு படங்களுக்கு விதித்துள்ள 100 சதவீத வரி, ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கும் பொருந்துமா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Trump 100 Percentage Tax on Non US Movies
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வரி விதிப்புகளால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். பல்வேறு துறைகளில் ஏற்கனவே வரி விதித்துள்ள அவர், தற்போது திரைப்படத் துறையையும் குறிவைத்துள்ளார். அமெரிக்காவில் வெளியாகும் வெளிநாட்டுப் படங்களுக்கு 100% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்கத் திரைப்படத்துறைக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், ஹாலிவுட்டை அழிக்க சதி நடப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
100 சதவீத வரி விதித்த டிரம்ப்
அமெரிக்கத் திரைப்படத்துறை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாகவும், பிற நாடுகள் ஹாலிவுட்டை ஈர்க்க சலுகைகளை அளிப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அவர் கருதுகிறார். வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தி அமெரிக்காவில் வெளியாகும் படங்களுக்கு 100% வரி விதிக்கப்படும் எனவும், இது தொடர்பாக வணிக வரித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்திய படங்களுக்கு டிரம்ப் வைத்த செக்
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற இந்திய மொழித் திரைப்படங்களும் அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டி வருகின்றன. இந்த வரி காரணமாக, இந்திய படங்களுக்கு அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் வருவாய் குறைய வாய்ப்பு உள்ளது, இது தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். இந்த வரி அறிவிப்பு, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உறவில் விரிசலை ஏற்படுத்தலாம்.
ஓடிடி ரிலீஸ் படங்களுக்கும் வரியா?
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் இந்திய திரைப்படங்களை அமெரிக்காவில் ஸ்ட்ரீம் செய்து வருகின்றன. இந்த வரி விதிப்பு ஓடிடி தளங்களுக்கும் பொருந்துமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஒருவேளை, இந்த வரி ஓடிடி தளங்களுக்கும் விதிக்கப்பட்டால், இந்தியத் திரைப்படங்களை பெரிய விலை கொடுத்து வாங்க ஓடிடி தளங்கள் தயக்கம் காட்டலாம். அப்படி நடந்தால் இந்திய படங்களுக்கான ப்ரீ ரிலீஸ் பிசினஸும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ஸ்கிவிட் கேம் போன்ற வெப் தொடர்களும் இந்த வரிவிதிப்பால் சிக்கலை சந்தித்துள்ளது.