Trisha : "அசிங்கமான எண்ணம் கொண்டவர்கள்" தன் மீது வரும் விமர்சனத்துக்கு திரிஷா பதிலடி
விஜயின் பிறந்த நாளுக்கு திரிஷா பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், தன்னை மோசமாக விமர்சிப்பவர்களுக்கு திரிஷா பதிலடி கொடுத்துள்ளார்.

Trisha Instagram Story Viral
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா. 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ என்கிற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளியான ‘மனசெல்லாம்’, ‘சாமி’, ‘எனக்கு 20 உனக்கு 18’, ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘ஆறு’, ‘உனக்கும் எனக்கும்’, ‘கிரீடம்’, ‘பீமா’, ‘குருவி’, ‘அபியும் நானும்’, ‘சர்வம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘என்றென்றும் புன்னகை’, ‘என்னை அறிந்தால்’, ‘கொடி’, ‘பொன்னியின் செல்வன்’, ‘லியோ’, ‘குட்பேட் அக்லி’, ‘விடாமுயற்சி’, ‘தக் லைஃப்’ ஆகிய பல வெற்றிப் படங்களில் நடித்து முடித்துள்ளார் தற்போது தெலுங்கில் ‘விஸ்வம்பரா’ மற்றும் தமிழில் ‘கருப்பு’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
விஜய் - திரிஷா சர்ச்சை
பல நடிகர்கள் நடிகைகள் பொதுவெளியில் ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். ஆனால் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரை துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும்போதும் நடிகை திரிஷா மீது எந்த சர்ச்சைகளும் ஏற்பட்டதில்லை. ஆனால் சமீப காலமாக திரிஷா விஜய் உடன் இணைத்து வைத்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். விஜய்யை மோசமாக விமர்சிப்பதற்கு பலரும் திரிஷாவை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் விஜய் மற்றும் திரிஷா இருவரையும் இணைத்து வைத்து மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
பிறந்தநாள் புகைப்படத்தால் தொடங்கிய சர்ச்சை
விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஆரம்பம் முதலே நல்ல நண்பர்கள். இவர்கள் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘கில்லி’ படத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தார்கள். அதன் பின்னர் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக இவர்கள் இருவரும் ‘லியோ’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அதன் பின்னர் ‘கோட்’ படத்தில் இருவரும் இணைந்து ஒரு பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினர். இந்த நிலையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு திரிஷா அவருக்கு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகத் தொடங்கியது. பலரும் விஜய் மற்றும் திரிஷா இருவரையும் இணைத்து வைத்து பேசத் தொடங்கினர். நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்க்களையும் பகிர்ந்து வந்தனர்.
விஜய் - திரிஷா சர்ச்சையின் ஆரம்ப புள்ளி
இந்த விமர்சனங்களுக்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது கீர்த்தி சுரேஷின் திருமணம் தான். சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு விஜய் மற்றும் திரிஷா இருவரும் பிரைவேட் ஜெட்டில் சென்றது விமர்சனத்திற்கு உள்ளானது. அதைத் பின்னரே இருவரும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் விஜயின் 51-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த திரிஷா விஜயை தனது செல்லப்பிராணி நாய் குட்டியுடன் சென்று சந்தித்தது போலவும், விஜய் அந்த நாய்க்குட்டியை தூக்கி கொஞ்சுவது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். வழக்கம் போல நெட்டிசன்களும் இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து விமர்சிக்க தொடங்கியிருந்தனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் பதிலடி கொடுத்த திரிஷா
இந்த நிலையில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு திரிஷா இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் பகிர்ந்து உள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றில், “நாம் அன்பால் நிறைந்திருக்கும் சமயத்தில், அது அசிங்கமான எண்ணம் கொண்டவர்களை குழப்புகிறது” என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையவாசிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. பலரும் திரிஷா தன்னை விமர்சிப்பவர்களுக்கு தான் இந்த பதிவை பதிவிட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.