- Home
- Cinema
- டாப் 10 இந்திய நடிகர், நடிகைகள் லிஸ்ட் வந்தாச்சு... தமிழ் சினிமா பிரபலங்கள் எத்தனை பேர் உள்ளார்கள் தெரியுமா?
டாப் 10 இந்திய நடிகர், நடிகைகள் லிஸ்ட் வந்தாச்சு... தமிழ் சினிமா பிரபலங்கள் எத்தனை பேர் உள்ளார்கள் தெரியுமா?
இந்தியாவின் பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியலை ஓர்மேக்ஸ் மீடியா வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான இந்தப் பட்டியலில், எந்தெந்த நடிகர், நடிகைகள் இடம்பெற்றுள்ளனர் என்பதை பார்க்கலாம்.

Top 10 Actors and Actress List
ஒரு படத்தின் முன்னணி நடிகர்களின் நட்சத்திர அந்தஸ்தை மட்டும் வைத்து படம் வெற்றி பெறும் காலம் இதுவல்ல. நடிகர்களின் பிராண்ட் மதிப்பை விட கதைக்களத்திற்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அதே சமயம், ஒரு நல்ல படமாக இருந்தால், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் நட்சத்திர மதிப்பு உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் படங்கள் பெற்ற வசூலை உதாரணமாகக் கூறலாம். அவரது மறுவெளியீடுகள் கூட சமீபத்தில் அதிக ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்தன. அதே சமயம், பெரிய நட்சத்திர மதிப்பு இல்லாமல் வெளியாகி மலையாள சினிமாவின் ஆல்-டைம் ஹிட்டான படங்கள், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புதிய தலைமுறை ரசிகர்களின் தேர்வாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான 10 ஹீரோக்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
டாப் 10 நடிகர்கள்
ஒவ்வொரு மாதமும் வெளியாகும் இந்தப் பட்டியலில், கடந்த மாதத்தை விட சில மாற்றங்களுடன் புதிய பட்டியல் வந்துள்ளது. ஆகஸ்ட் மாத பட்டியலில் இருந்த ரஜினிகாந்த் மற்றும் அக்சய் குமார் ஆகியோர் புதிய பட்டியலில் இல்லை. அவர்களுக்குப் பதிலாக பவன் கல்யாண் மற்றும் ராம் சரண் புதிதாக இணைந்துள்ளனர். முதல் இரண்டு இடங்கள் கடந்த மாதத்தைப் போலவே உள்ளன. பிரபாஸ் முதல் இடத்திலும், விஜய் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். கடந்த மாதம் மூன்றாவது இடத்தில் இருந்த அஜித் குமார், இந்த முறை ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அந்த மூன்றாவது இடத்தை அல்லு அர்ஜுன் பிடித்துள்ளார்.
நான்காவது இடத்தை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஷாருக்கான் தக்கவைத்துள்ளார். ஆகஸ்ட் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்த மகேஷ் பாபு, புதிய பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்த ஜூனியர் என்.டி.ஆர், இந்த முறை ஏழாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். கடந்த பட்டியலில் இல்லாத ராம் சரண் இந்த முறை எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஒன்பதாவது இடத்தில் கடந்த பட்டியலில் இல்லாத பவன் கல்யாண் இடம்பிடித்துள்ளார். கடந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்த சல்மான் கான், இந்த முறை பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
டாப் 10 நடிகைகள்
தென்னிந்திய நடிகை சமந்தா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஆலியா பட்டை அவர் மீண்டும் பின்னுக்குத் தள்ளியுள்ளார். ஆலியா பட் இரண்டாம் இடத்தைப் பிடித்த நிலையில், தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் மூன்றாவது இடத்தில் உள்ளார். நான்காவது இடத்திலும் தென்னிந்திய நடிகையான த்ரிஷா இடம்பிடித்துள்ளார். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாரா இந்த முறையும் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் 'நேஷனல் க்ரஷ்' ராஷ்மிகா மந்தனா உள்ளார்.
ஆதிக்கம் செலுத்தும் தென்னிந்திய நடிகைகள்
அவருக்கு அடுத்த இடத்தில் சாய் பல்லவி இருக்கிறார். தொடர் வெற்றிப் படங்களில் நடிப்பது சாய் பல்லவியை முன்னணி நடிகையாக உயர்த்தி இருக்கிறது. கடைசியாக தமிழில் 'அமரன்' படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் உலகளவில் 350 கோடிக்கு மேல் வசூலித்தது.
இதைத் தொடர்ந்து, சாய் பல்லவி, நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்த தெலுங்கு படமான 'தண்டேல்' படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. சாய் பல்லவிக்கு அடுத்தபடியாக தமன்னா பாட்டியா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் இடம்பிடித்துள்ளதாக ஓர்மேக்ஸ் மீடியா வெளியிட்டுள்ள செப்டம்பர் மாத பட்டியல் காட்டுகிறது. இந்தியாவின் பிரபலமான நடிகைகள் அடங்கிய டாப் 10 பட்டியலில் 2 பாலிவுட் நடிகைகள் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள எட்டு இடங்களையும் தென்னிந்திய நடிகைகளே ஆக்கிரமித்து உள்ளனர்