2025-ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தென்னிந்திய நடிகைகள்
தென்னிந்திய நடிகைகள் பலரும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிப்பதன் காரணமாக பெரிய அளவில் பணம் சம்பாதித்து வருகின்றனர். இந்த பதிவில் 2025-ம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தென்னிந்திய நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவியின் மார்க்கெட் சமீப காலமாக கணிசமாக உயர்ந்து வருகிறது. தனது இயல்பான நடிப்பு மற்றும் அபாரமான நடனத் திறமையால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த அவர், நிதேஷ் திவாரி இயக்கும் பாலிவுட் படமான ராமாயணத்திற்காக ரூ.18 முதல் ரூ.20 கோடி சம்பளம் வாங்க உள்ளார். இதன் மூலம் தெற்கில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சாய்பல்லவி மாறியுள்ளார்.
நயன்தாரா
‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழ்நாட்டில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டில் அறிமுகமான ‘ஜவான்’ படத்திற்காக ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்பட்டது. மேலும் அவரது திருமண ஆவணப்படத்தின் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்றதன் மூலம் ரூ.25 கோடி சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனா
தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்து வரும் ராஷ்மிகா மந்தனா ‘நேஷனல் கிரஷ்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் ‘அனிமல்’, ‘புஷ்பா 2’ மற்றும் ‘சாவா’ ஆகிய படங்களில் தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளார். ‘புஷ்பா 2’ திரைப்படத்திற்காக ரூ.10 கோடியும், ‘சாவா’ படத்திற்கு ரூ.4 கோடியும் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. சல்மான் கான் நடித்து வரும் ‘சிக்கந்தர்’ படத்தில் நடித்ததற்காக அவர் ரூ.13 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
திரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக நீண்ட காலமாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். திரிஷா ஒரு படத்திற்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் நடித்திருக்கும் அடுத்த படமான விஸ்வம்பராவுக்காக ரூ12 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளது.
சமந்தா
சமந்தா ஒரு படத்திற்கு ரூ.3 முதல் ரூ.8 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அவர் நடித்த ஸ்பை திரில்லர் திரைப்படமான ‘சிட்டாடல்’ படத்திற்காக அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்பட்டது. அவரது திரைவாழ்க்கையில் அவர் வாங்கிய அதிகபட்ச தொகை இதுவாகும்.
பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் ஒரு படத்திற்கு சம்பளமாக ரூ.2.5 முதல் ரூ.7 கோடி வரை வாங்குவதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக பூஜா ஹெக்டே விளங்கி வருகிறார்.
அனுஷ்கா
குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக அனுஷ்கா விளங்கி வருகிறார். அவர் ஒரு படத்திற்கு சுமார் ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ‘பாகுபலி 2’ மற்றும் அவரது வரவிருக்கும் மலையாள படமான ‘கதனார்’ படத்திற்கு தலா ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
ஜான்வி கபூர்
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருக்கும் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். ‘தேவாரா’ படத்தின் மூலமாக அறிமுகமான அவர், அந்தப் படத்தில் நடித்ததற்காக ரூ.5 கோடி சம்பளம் பெற்றார். சமீபத்தில் ராம்சரனுடன் தனது இரண்டாவது தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்திற்காக அவர் ரூ.6 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
தமன்னா
தென்னிந்திய நடிகைகளில் முக்கிய நடிகையாக தமன்னா இருந்து வருகிறார். இவர் ஒரு படத்திற்கு சுமார் ரூ.4 முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் பெறுகிறார். சமீபத்தில் கர்நாடக அரசின் சோப்பு தயாரிக்கும் நிறுவனமான மைசூர் சாண்டல் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டதற்காக ரூ.6 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
பிற நடிகைகள்
நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் ஆகியோர் ஒரு படத்திற்கு ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை சம்பளம் பெறுகிறார்கள். இது தோராயமான சம்பளப் பட்டியல் மட்டுமே. நடிகைகளின் சம்பளம் அவர்களின் படம், படக்குழு, கதாபாத்திரம் மற்றும் மார்க்கெட் மதிப்பு ஆகியவற்றை குறித்து மாறுபடலாம்.