தமிழ் திரையுலகின் பணக்கார தயாரிப்பாளர் யார் தெரியுமா? அவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?
தமிழ் திரையுலகின் பணக்கார திரைப்பட தயாரிப்பாளராக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் கலாநிதி மாறன் விளங்கி வருகிறார். இவர் சன் டிவி நெட்வொர்க்கில் முக்கிய பங்குதாரராகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்து வருகிறார்.

Kalanidhi Maran - Sun Pictures
கலாநிதி மாறன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அக்கா மகன் முரசொலி மாறனின் மூத்த மகனாவர். இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.33,400 கோடி (3.6 பில்லியன் டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இவரின் தலைமையில் 2008-ம் ஆண்டில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. இது சன் குழுமத்தின் ஒரு பகுதியாகும். தமிழ் திரைப்படங்களை தயாரிப்பதிலும், வெளியிடுவதிலும் சன் பிக்சர்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனம் மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது.
சன் பிக்சர்ஸின் முதல் வெற்றிப் படம்
சன் குழுமத்திற்கு தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள், இதழ்கள் என பல்வேறு ஊடகங்களில் வலுவான அடித்தளம் இருந்த காரணத்தினால் சன் பிக்சர்ஸ் விரைவான வளர்ச்சி கண்டது. தங்கள் தயாரிப்புகளை டிவி நெட்வொர்க் மூலம் விளம்பரப்படுத்த கிடைத்த வாய்ப்பு அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமைந்தது. இந்த நிறுவனம் தொடர்ந்து வெற்றி படங்களை தயாரித்து தமிழ் திரையுலகிற்கு அளித்துள்ளது. அதில் முதல் வெற்றி படமாக ‘எந்திரன்’ விளங்குகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டி கொடுத்தது.
ரூ.200 கோடி வசூலை குவித்த படங்கள்
அதன் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘சர்க்கார்’ திரைப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலை கொடுத்தது. 2019-ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் ரூ.240 கோடி வசூலைக் கொடுத்தது. அதே ஆண்டில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘பசும்பொன்’ ரூ.200 கோடி வசூலை அள்ளியிருந்தது. 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ஒரே வாரத்தில் ரூ.375 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருந்தது.
பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படங்கள்
தற்போது சன் பிக்சர்ஸ் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்களில் முதலீடு செய்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டிலும், ரஜினிகாந்த்-நெல்சன் கூட்டணியில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரூ.300 கோடி பட்ஜெட்டிலும், அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ரூ.600 கோடி பட்ஜெட்டிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் சுமார் ரூ1,300 கோடிக்கும் மேல் சினிமா தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
தவிர்க்க முடியாத சக்தியாக மாறிய சன் பிக்சர்ஸ்
சன் நெட்வொர்க்கின் வலுவான ஆதரவு மற்றும் கலாநிதி மாறனின் தொலைநோக்குப் பார்வையுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் திரையுலகில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமாகவும், பான் இந்தியா திரைப்படங்களை தயாரிப்பதன் மூலமும் சன் பிக்சர்ஸ் இந்திய அளவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது. தமிழ் சினிமாவின் வருங்கால வளர்ச்சிக்கு உந்து சக்தியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் மாறி உள்ளது.