- Home
- Cinema
- Thug Life : எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஓடிடியில் ரிலீஸ் ஆன தக் லைஃப் - எந்த தளத்தில் பார்க்கலாம்?
Thug Life : எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஓடிடியில் ரிலீஸ் ஆன தக் லைஃப் - எந்த தளத்தில் பார்க்கலாம்?
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் சைலண்டாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.

Thug Life Movie OTT Release
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி, ரசிகர்களைக் கவரத் தவறிய படங்கள் தமிழில் அதிகளவில் வெளிவந்த வண்ணம் உள்ளன. கமல்ஹாசன் நடித்த 'தக் லைஃப்' படமும் அவற்றில் ஒன்று. கமல்ஹாசனும் மணிரத்னமும் 37 வருடங்களுக்குப் பிறகு இணைந்த படம் இது என்பதால், இப்படத்திற்கான அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமின்றி இப்படம் பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக புரமோஷனும் செய்யப்பட்டது. அதில் படத்தை பற்றி படக்குழுவினர் ஓவர் ஹைப் கொடுத்திருந்தனர். இப்படம் கடந்த ஜூன் மாதம் 5ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
தக் லைஃப் படக்குழு
தக் லைஃப் திரைப்படத்தில் சிலம்பரசன், ஜோஜு ஜார்ஜ், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், அசோக் செல்வன், அலி ஃபாசல், பங்கஜ் திரிபாதி, ஜிஷு சென்குப்தா, சன்யா மல்ஹோத்ரா, ரோஹித் ஷெரஃப், வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ், ஆர். மகேந்திரன், சிவா ஆனந்த் ஆகியோர் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னத்தின் வழக்கமான தொழில்நுட்பக் குழுவினரான ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும், ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவும் செய்துள்ளனர்.
வசூலில் வாஷ் அவுட் ஆன தக் லைஃப்
தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான நாளில் முதல் காட்சியிலிருந்தே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. சுமார் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ.97.44 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.56.24 கோடி வசூல் செய்திருந்தது. தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கில் மட்டுமே ரிலீஸ் ஆன இப்படம் மொழி பிரச்சனை காரணமாக கன்னடத்தில் ரிலீஸ் செய்யப்படவில்லை. இதனால் படக்குழுவுக்கு 30 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாம்.
சத்தமின்றி ஓடிடியில் ரிலீஸ் ஆன தக் லைஃப்
இந்நிலையில் தக் லைஃப் திரைப்படத்தை சத்தமே இல்லாமல் சைலண்டாக ஓடிடியில் ரிலீஸ் செய்துள்ளனர். இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 28 நாட்கள் ஆகும் நிலையில், இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தக் லைஃப் திரைப்படம் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் ஸ்ட்ரீம் ஆகிறது. சமீப காலமாக தியேட்டரில் தோல்வி அடைந்த படங்கள் சில ஓடிடியில் வெளியான பின்னர் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றதுண்டு. அந்த வகையில் தக் லைஃப் படத்திற்கு ஓடிடியில் பாசிடிவ் விமர்சனம் கிடைக்கிறதா? நெகடிவ் விமர்சனம் கிடைக்கிறதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.