சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழகத்தில் இனி திரையிடப்படாது என அறிவிப்பு - காரணம் என்ன?
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் காட்சிகள் இன்று திடீரென தமிழகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டு உள்ளதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.
சுதிப்தோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்த இந்தி திரைப்படம் தான் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் ரிலீஸ் ஆனதில் இருந்தே இதற்கு எதிர்ப்புகள் வலுத்து வந்தன. ஏனெனில் இதில் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்களை வெளிநாட்டுக்கு வேலைக்காக அழைத்துச் சென்று, அவர்களை கட்டாய மதமாற்றம் செய்து ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்பில் சேர்த்துவிடப்படுவதாக சர்ச்சைக்குரிய காட்சிகளும் இடம்பெற்று இருந்தன.
இதனால் கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ் மற்றும் முஸ்லீம் அமைப்புகளும் குரல் கொடுத்து வந்ததோடு, இப்படத்திற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் உச்ச நீதிமன்றம் தடை செய்ய மறுத்துவிட்டதால், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மே 5-ந் தேதி நாடு முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீசுக்கு பின் அப்படத்திற்கான எதிர்ப்பு மேலும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இதையும் படியுங்கள்... விஸ்வரூபத்திற்கு நாங்க செஞ்சது மாதிரி 'தி கேரள ஸ்டோரி'க்கு தற்போதைய அரசு செய்யனும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தமிழகத்தில் கேரளா ஸ்டோரி படத்தை ரிலீஸ் செய்தால் பிரச்சனை வர வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்து இருந்தது. இதனால் இப்படம் வெளியாகும் திரையரங்குகளில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்தனர்.
இந்நிலையில், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்று இப்படத்திற்கான காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. நேற்று வரை மால்களில் மட்டும் திரையிடப்பட்டு வந்த இப்படம் இன்று முதல் அதிலும் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்