விஜய் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... இறுதி அறிக்கை தயாரிப்பில் வருமான வரித்துறை தீவிரம்...!
தற்போது 10 மாதங்களுக்குப் பிறகு பிகில் திரைப்படம் தொடர்பாக நடைபெற்ற ரெய்டு குறித்து வருமான வரி புலனாய்வு பிரிவு இறுதி அறிக்கையை தயார் செய்து வருகின்றனர்.
லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் கடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலி என்.எல்.சி.யில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய்யிடம் தீவிர விசாரணை நடத்தியதோடு தங்களது காரிலேயே சென்னை அழைத்து வந்தனர்.
இரவோடு, இரவாக சென்னை பனையூர் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்ட விஜய் முன்னிலை அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அதுமட்டுமின்றி ஏ.ஜி.எஸ் சினிமாஸ் அலுவலகம், பைனான்சியர் அன்புச் செல்வனின் வீடு உட்பட பிகில் திரைப்படத்துடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
பைனான்சியர் அன்புச் செல்வன் தொடர்புடைய இடங்களிலிருந்து சோதனையின் போது கணக்கில்வராத ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், ஏராளமான வரவு செலவு, முதலீடு ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அப்போது வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் விஜய் பிகில் படத்திற்காக 50 லட்சம் ரூபாய் ஊதியம் பெற்றுள்ளதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ரூ.180 கோடியில் தயாரிக்கப்பட்ட பிகில் திரைப்படம் ரூ.300 கோடி வசூல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த வழக்கில், இதுவரை 35 பேரின் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், 1,200 பக்க ஆதாரங்கள் சிக்கியதாக வருமானவரித்துறை தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 10 மாதங்களுக்குப் பிறகு பிகில் திரைப்படம் தொடர்பாக நடைபெற்ற ரெய்டு குறித்து வருமான வரி புலனாய்வு பிரிவு இறுதி அறிக்கையை தயார் செய்து வருகின்றனர். எந்த நேரத்திலும் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் தாக்கலாக உள்ள இந்த அறிக்கையில் பல அதிர்ச்சியான தகவல்கள் இடம் பெற்றிருக்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.