MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாக்ஸ் ஆபிஸ் நாயகனுக்கு பாலிடிக்ஸ் ஆசை எப்படி வந்தது? விஜய்யின் விஸ்வரூப அரசியல் - ஒரு பார்வை

பாக்ஸ் ஆபிஸ் நாயகனுக்கு பாலிடிக்ஸ் ஆசை எப்படி வந்தது? விஜய்யின் விஸ்வரூப அரசியல் - ஒரு பார்வை

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவர் திரையுலக பயணத்தில் இருந்து அரசியல் பாதைக்கு திரும்பியது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

5 Min read
Ganesh A
Published : Jun 22 2023, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
vijay

vijay

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகம் மட்டும் தான் மூன்று முதலமைச்சர்களை சினிமாவில் இருந்து பெற்றிருக்கிறது. சினிமாவுக்கு அரசியலுக்குமான தொடர்பு தமிழ்நாட்டில் அவ்வளவு வலிமையானது. திரையில் நீதிக்காக போராடுபவர்கள் அரியணையில் அமர்ந்த பின்னும் அதையே செய்வார்கள் என்ற பின்பம் தமிழகத்தில் சற்று கூடுதலாக பரவி இருப்பதை எவராலும் மறுக்க முடியாது. எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதாவில் தொடங்கி விஜயகாந்த் வரை சினிமாவில் இருந்து அரசியலுக்கு போனவர்கள் அங்கு ஏற்படுத்திய தாக்கம் ஏராளம். இந்த நிலையில், அடுத்து இவரும் வருவார் என ரசிகர்களின் பார்வை தற்போது ஒருவர் மீது திரும்பி இருக்கிறது. அவர்தான் தளபதி விஜய்.

விஜய்க்கும் அரசியலுக்குமான பினைப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் விஜய்யின் திரைப்பயணத்தை ஆரம்பத்தில் இருந்தே அலச வேண்டும். 1992-ம் ஆண்டு தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான மாண்புமிகு மாணவன் திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய். அப்போது அவருக்கு வயது 18. எனினும் அப்படத்தில் விஜய் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகவே முன்னிறுத்தப்பட்டார்.

29
vijay

vijay

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி புரட்சிகரமான படங்கள் எடுப்பதற்கு பெயர்பெற்றவர் ஆவார். சட்டம் ஒரு இருட்டறை, நீதியின் மறுபக்கம், நான் மகான் அல்ல என விஜயகாந்த், ரஜினியை வைத்து எஸ்.ஏ.சி இயக்கிய படங்கள் பெரும்பாலும் சமூக அவலங்களை நோக்கி கேள்விகளை எழுப்பின. குறிப்பாக விஜயகாந்திற்கு புரட்சிகரமான பல வசனங்களை எழுதி, அவரது அரசியல் எண்ட்ரிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் என்று எஸ்.ஏ.சி.யை சொல்வார்கள்.

அப்படிப்பட்டவர், தன்னுடைய மகன் விஜய்யை ஹீரோவாக அறிமுகப்படுத்தும்போது மட்டும் சும்மா இருப்பாரா என்ன, விஜய்க்கும் ரஜினி, விஜயகாந்த் பாணியில் கதை அமைத்து, அவரையும் ஒரு மாஸ் ஹீரோவாக மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்க எஸ்.ஏ.சி விரும்பினார். அந்த வகையில் தான் அறிமுகமான முதல் படத்திலேயே அநீதியை எதிர்க்கும் ஒரு கல்லூரி மாணவனாக புரட்சி பேசும் கேரக்டரில் நடித்தார் விஜய். இருப்பினும் விஜய்க்கு நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றுத்தந்து காதல் படங்கள் தான்.

39
vijay

vijay

எனினும் ஆக்‌ஷன் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. காதல் படங்களுக்கு நடுவே தமிழன் படத்தில் சமூக பிரச்சனையை பேசும் ஒரு வழக்கறிஞராக நடித்தார் விஜய். நீதி தொடர்பாக படங்களை எடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட் ஆன எஸ்.ஏ.சி, தன் மகனுக்காக தமிழன் படத்துக்கு திரைக்கதை எழுதிக்கொடுத்தார். எம்.ஜி.ஆர்., ரஜினி வரிசையில் விஜய்யை முன் நிறுத்தி எடுக்கப்பட்ட படமே தமிழன் என்பது அப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பார்த்தாலே தெரியும்.

அதன்பின்னர் விஜய் நடித்த அனைத்துமே ஆக்‌ஷன் படங்கள் தான். இதில் பெரும்பாலான படங்கள் வசூல் சாதனை புரிந்து ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர் படையை கொண்ட நாயகனாக விஜய்யை உயர்த்தியது. ரஜினி பாணியில் ஒவ்வொரு முறை மேடை ஏறும் போதும் ‘என் நெஞ்சில் குடியிருக்கும் என அன்பான ரசிகர்கள்’ எனக்கூறி பேசுவதை வழக்கமாக மாற்றினார் விஜய். இப்படி திரையிலும், திரைக்கு வெளியிலும் ரஜினி வழியை பின் தொடர்ந்ததாலோ என்னவோ, ரஜினியைப் போல விஜய்யும் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியது.

இதையும் படியுங்கள்.... போட்ரா வெடிய.. தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்தம் தெறிக்க வெளியான 'லியோ' ஃபர்ஸ்ட் லுக்..!

49
vijay

vijay

2008-ம் ஆண்டு ஈழத்தில் போர் உச்சம் பெற்ற காலகட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற விஜய், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரு கோடி தந்திகள் என்று கேட்டுக்கொண்டதோடு, அதன்பின் ஒருவாரம் கழித்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள், உண்ணாவிரதம் இருந்தனர். சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விஜய், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக எங்கள் உணர்வை தெரிவிக்கும் போராட்டம் இது, இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்று பேசினார்.

இலங்கை தமிழர்களுக்காக விஜய் தன் ரசிகர்களுடன், உண்ணாவிரதம் இருந்தது, விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கான அடித்தளம் என்று பேசப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 2009-ம் ஆண்டு, தன் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய் அதன்மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய்க்கு திடீரென டெல்லியில் ராகுல் காந்தியிடம் இருந்து எதிர்பாராத அழைப்பு வந்தது.

59
vijay

vijay

இதையடுத்து விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சி-யும் ராகுலை சந்தித்து திரும்பியதும், காங்கிரஸ் உடன் அவர் கூட்டணி அமைக்கப்போவதாக பேச்சுகள் எழத் தொடங்கின. விஜய் ராகுல் காந்தியை சந்தித்து திரும்பியது காவலன் சமையத்தில் அவருக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. எந்தப் பக்கத்தில் இருந்து பிரச்சனை வருகிறது. யாரால் பிரச்சனை வருகிறது என்பது தெரியாமல் நிலைகுலைந்து போனார் விஜய். அரசியல் ரீதியாக விஜய் சந்தித்த முதல் நெருக்கடியும் இதுதான்.

காவலன் சமயத்தில் திமுகவினர் உடன் ஏற்பட்ட மோதல், 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக-விற்கான ஆதரவு நிலையாக மாறியது. திமுக உடன் விஜய்க்கு இருக்கும் அதிருப்தியை அறிந்த ஜெயலலிதா, எஸ்.ஏ.சி-யை அழைத்து 2011-ம் ஆண்டு தேர்தலில் ஆதரவு கேட்டார். அந்த சமயத்தில் ஜெயலலிதாவிடம் மக்கள் இயக்கத்தினருக்காக 15 சீட்கள் தான் கேட்டதாகவும், அதற்கு ஜெயலலிதா நோ சொல்லிவிட்டதாகவும் எஸ்.ஏ.சி சொன்னார். இருப்பினும் அந்த தேர்தலில் அதிமுக-வை ஆதரித்து மக்கள் இயக்கம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 

69
vijay

vijay

தேர்தலில் அதிமுக பெரியளவில் வெற்றிபெற்றது. அதுவரை விஜய்க்கு அனைத்தும் நன்றாகவே சென்றுகொண்டிருந்தது. அதிமுகவின் இந்த வெற்றி குறித்து பேட்டி ஒன்று அளித்த எஸ்.ஏ.சி, ராமர் பாலம் கட்ட அணில் உதவியது போல், அதிமுகவின் வெற்றிக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவியதாக தெரிவித்தார். இது ஒருபுறம் இருக்க, அதுவரை மறைமுகமாக படங்களில் அரசியல் பேசி வந்த விஜய், தலைவா என்கிற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தது முதல், அதில் டைம் டு லீடு என கேப்ஷன் போட்டதோடு மட்டுமின்றி பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெள்ளை சட்டை அணிந்து வந்து மக்களை நோக்கி கையசைப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டது என அந்த சமயத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது விஜய்யின் இந்த படம்.

அதுமட்டுமின்றி படத்தில் நீங்கள் தான் எங்கள் அடுத்த அண்ணா என்பது போன்ற அரசியல் வசனங்கள் அன்றைய ஆளும் கட்சியான அதிமுகவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, தலைவா படம் வெளியானால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் எனக்கூறி அப்படத்தை வெளியிட தடை விதித்தது அன்றைய அதிமுக அரசு. படம் வெளியாகாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தாலும், எங்கள் தளபதியின் படத்தை பார்த்து அரசியல் கட்சி பயப்படுகிறது என்று மார்தட்டிக் கொண்டார்கள்.

இதையும் படியுங்கள்.... 2026-ல் ஜோசப் விஜய் எனும் நான்.. நடிகர் விஜய்க்காக நடுக்கடலில் பேனர் வைத்த ரசிகர்கள்

79
vijay

vijay

தலைவா அரசியல் சார்ந்த படம் அல்ல என விளக்கியும், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து விஜய் வீடியோ வெளியிடும் அளவிற்கு இந்த பிரச்சனை வீரியம் பெற்றது. திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளை பகைத்துக் கொண்ட விஜய், அடுத்தடுத்த அரசியல் நடவடிக்கைகளில் நிதானம் காட்டத்தொடங்கினார். இதையடுத்து மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை எதிர்த்து வசனம் பேசியதற்காக பாஜகவினரின் கடும் எதிர்ப்புகளை பெற்றார் விஜய். 

அந்த சமயத்தில் இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்த விஜய், அடுத்து வெளிவந்த சர்க்கார் திரைப்பட ஆடியோ லாஞ்சில் அதிரடியாக பேசினார். அதில் கற்பனையில் முதல்வர் ஆனால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என்று கூறி அதிரடி காட்டினார். விஜய்யின் இந்த பேச்சுக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஒருகட்டத்தில் சர்க்கார் படம் ஓடும் திரையரங்குகளில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடும் அளவிற்கு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

89
vijay

vijay

அதேபோல் 2018-ம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க இரவோடு இரவாக தூத்துக்குடி வந்து, தன் ரசிகர்களுடன் பைக்கில் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று ஆறுதல் கூறினார் விஜய். இதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தார் விஜய். இதையடுத்து தொடர்ந்து படங்களிலும், ஆடியோ லாஞ்சிலும் அரசியல் பேசி வந்தார் விஜய்.

பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு நடிகர் விஜய்யின் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் மாஸ்டர் பட ஷூட்டிங்கிற்காக கல்பாக்கம் சென்ற விஜய், அங்கு தன்னை பார்க்க வந்த ரசிகர்களுடன் ஒரு மாஸ் ஆன செல்பி எடுத்து தன் படைபலத்தை காட்டினார். இதையடுத்து மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் உண்மையாக இருப்பதை விட ஊமையாக இருக்க வேண்டும் எனக் கூறி அரசியல் பேசாமல் நழுவிக்கொண்டார்.

99
vijay

vijay

அதன்பின்னர் தனது அரசியல் நகர்வுகளை  சைலண்டாக செய்யத்தொடங்கிய விஜய், ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி அளித்தார். அந்த தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர்கள் வெற்றிபெற்றது விஜய்க்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் தன் அரசியல் பக்கம் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்ட விஜய், சமீபத்தில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளை கெளரவிக்க மிகப்பெரிய விழா ஒன்றை நடத்தினார்.

அதில் ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என நாளைய வாக்காளர்களிடம் விதையை விதைத்து அரசியல் வருகையை ஆணித்தனமாக அறிவித்தார் விஜய். வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்க விஜய் திட்டமிட்டு உள்ளதாகவும், அதன் காரணமாக தளபதி 68 படத்துடன் அவர் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. விஜய்யின் இந்த அரசியல் நகர்வுக்கு.. வர்லாம் வர்லாம் வா என்கிற ஆதரவு குரல் தான் அதிகளவில் எழுவதால் கண்டிப்பாக விஜய் 2026 தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்.... நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டின் சாபக்கேடு! விஜய் ரசிகர்களை தெறிக்கவிடும் திருமாவளவன்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved