- Home
- Cinema
- CM Vijay : பிரிட்டனில் ஃபேமிலி ரீயூனியன்? மனைவி சங்கீதாவை சந்திக்கப்போகிறாரா முதல்வர் விஜய்?
CM Vijay : பிரிட்டனில் ஃபேமிலி ரீயூனியன்? மனைவி சங்கீதாவை சந்திக்கப்போகிறாரா முதல்வர் விஜய்?
Vijay London Visit : முதல்வர் விஜய் லண்டனுக்கு அரசு முறை பயணமாக செல்ல உள்ள நிலையில், அங்கு அவர் தனது மனைவி சங்கீதாவை சந்திப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

CM Vijay London Visit
தமிழக முதல்வரும் நடிகருமான விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் லண்டனில் தனது மனைவி சங்கீதாவை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது. வெளிநாட்டுப் பயணத்திற்குத் தேவையான டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டை பெறுவதற்காக விஜய் சென்னை அண்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேற்று சென்றிருந்தார்.
ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருந்தாலும், முதல்வர் உள்ளிட்ட அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்கு பயன்படுத்தும் சிறப்பு பாஸ்போர்ட்டுக்காக அவர் விண்ணப்பித்ததாக தகவல் தெரிவிக்கிறது. விஐபி நடைமுறையின் அடிப்படையில் இந்த பாஸ்போர்ட் விரைவில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சங்கீதா விவாகரத்து வழக்கு என்ன ஆனது?
விஜய்யின் குடும்ப வாழ்க்கை தொடர்பாக கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் குடும்ப வாழ்க்கை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கு பல கட்டங்களாக விசாரணைக்கு வந்தபோதிலும், விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்கள் விசாரணையில் பங்கேற்றனர்.
வாபஸ் பெற்ற சங்கீதா
இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாத விசாரணையின்போது, வழக்கில் சமரசத்திற்கான வாய்ப்புகளை பரிசீலிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் பங்கேற்றிருந்ததால் அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சங்கீதாவை சந்திப்பாரா விஜய்?
அதே சமயம் லண்டனில் இருந்த சங்கீதா வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகி, தான் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற விரும்புவதாக கூறினார். இதையடுத்து அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அந்த வழக்கை முடித்து வைத்தது. இந்த நிலையில், விஜய்யின் பிரிட்டன் பயணம் மீண்டும் அவரது குடும்ப வாழ்க்கை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக லண்டனில் இருக்கும் சங்கீதாவை அவர் சந்திப்பாரா என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் குடும்பத்தினர் சமரசம் செய்திருக்கலாம் என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால் இதுகுறித்து விஜய் அல்லது சங்கீதா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. லண்டனில் விஜய் தன் மனைவி சங்கீதா மற்றும் அவரது மகள் திவ்யாவை சந்திக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

