- Home
- Cinema
- இதுக்கு மட்டும் டைம் இருக்கா முதல்வரே..! கூலி படம் பார்த்த மு.க.ஸ்டாலினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
இதுக்கு மட்டும் டைம் இருக்கா முதல்வரே..! கூலி படம் பார்த்த மு.க.ஸ்டாலினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் ப்ரீமியர் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்து படக்குழுவை பாராட்டி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

MK Stalin Wished Coolie Movie
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சி வெளிநாடுகளில் திரையிடப்பட்டுள்ளன. அங்கு ரசிகர்கள் அரங்கம் அதிர... விசில் பறக்க கூலி படத்தை கொண்டாடி வருகிறார்கள். கூலி படத்தின் மூலம் ரஜினிகாந்தும், லோகேஷ் கனகராஜும் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வண்ணம் தற்போது கூலி படத்தை முதல் ஆளாக பார்த்து பாராட்டி இருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கூலி படக்குழுவுக்கு முதல்வர் வாழ்த்து
கூலி படத்தின் ஸ்பெஷல் காட்சி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டும் சன் டிவி அலுவலகத்தில் திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன் ஆகியோருடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூலி படம் பார்த்ததாக கூறப்படுகிறது. படம் பார்த்த பின்னர் அவர்களுடன் முதல்வர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு, உங்கள் வாழ்த்திற்கும், அன்பிற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
ஸ்டாலினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
கூலி படம் பார்த்தது பற்றி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் எந்தவித அப்டேட்டும் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில், அந்த போட்டோவை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளதால், அந்த பதிவின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலினை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். ஏனெனில், கடந்த 13 நாட்களாக சென்னையில் போராடி வரும் தூய்மை பணியாளர்களை சந்திக்க டைம் இல்லாத முதல்வருக்கு கூலி படம் பார்க்க மட்டும் நேரம் இருக்கிறதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
பணி நிரந்தரம் செய்துதரக் கோரி, சென்னை ரிப்பன் மாளிகை முன் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் 13 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி, போராட்டக் குழுவினரை தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து அவர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்தார். இந்த போராட்டத்திற்கு தீர்வு காணாததால் தமிழக அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சமயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூலி படம் பார்த்துள்ளது பேசு பொருள் ஆகி உள்ளது.