ரூ.25 லட்சம் மோசடி செய்த தமிழ் இசையமைப்பாளர்? காவல்நிலையத்தில் புகார்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இருப்பவர் சாம் சி.எஸ். இவர் தமிழ் படம் ஒன்றிற்கு இசையமைப்பதற்காக வாங்கிய ரூ.25 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Music Director Sam C.S
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் 2010-ம் ஆண்டு வெளிவந்த ‘ஓர் இரவு’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 2017-ம் ஆண்டு வெளியான ‘விக்ரம் வேதா’ படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. ‘கைதி’ படத்தில் அவரின் பின்னணி இசை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்குப் பின் பின்னணி இசை என்றாலே சாம் சி.எஸ் என்ற அளவிற்கு கொடிகட்டிப் பறக்கத் தொடங்கினார். ‘புஷ்பா 2’ படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்தாலும் சாம் சி.எஸ் பின்னணி இசையமைத்தார்.
ரூ.25 லட்சம் பண மோசடி புகார்
இந்த நிலையில் தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் சாம் சி.எஸ் மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் பண மோசடி புகாரை அளித்துள்ளார். அந்தப் புகாரில், “கடந்த 2021-ம் ஆண்டு ‘தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு’ என்ற படத்தில் சாம் சி.எஸை ஒப்பந்தம் செய்தோம். அதற்காக அவருக்கு ரூ.25 லட்சம் முன் பணம் கொடுக்கப்பட்டது. சில காரணங்களால் அந்தப் படத்தை தொடர்ந்து எடுக்க முடியவில்லை. அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதற்காக சாம்.சி.எஸை இசையமைத்துக் கொடுக்கச் சொல்லி பலமுறை கேட்டுக் கொண்ட பிறகும் அவர் இசையமைத்து கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் அளித்த விளக்கம்
இதற்கு பதில் அளித்துள்ள சாம் சி.எஸ், “கடந்த 2020-ம் ஆண்டு ‘தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு’ என்ற தலைப்பு கொண்ட படத்திற்கு இசையமைக்க என்னை தயாரிப்பாளர் திரு.சமீர் அலிகான் ஒப்பந்தம் செய்தார். இத்தனை ஆண்டுகள் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்த அவர், தற்போது முழு படத்தையும் எடுத்து முடித்து விட்டதாக வாய்மொழியாகக் கூறி என்னிடம் இசையமைக்க சொல்லி கேட்டார். இதற்கு முன் ஒப்பந்தம் செய்த படங்களின் பணிகள் இருப்பதால் காலதாமதம் ஆகும் என்ற நிலவரத்தை அவரிடம் எடுத்து கூறினேன்.
பணத்தை திருப்பி கொடுக்க முடிவு செய்தேன்
காத்திருப்பதாக சொல்லிவிட்டு சென்ற அவர், கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் நிலையத்தில் அதற்கான விளக்கங்கள் ஆதாரத்தோடு கொடுக்கப்பட்ட நிலையில், காவல் நிலையத்தால் தான் நினைத்தது நடக்காது என்று உணர்ந்த அவர், தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி புகார் அளித்தார். அங்கு தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் முன்னிலையிலும், இசையமைப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையிலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. தயாரிப்பாளர் நிலையை மனதில் கொண்டும், நிர்வாகிகளின் ஆலோசனைப்படியும், சில பாடல்களை இசையமைத்து கொடுத்திருந்த போதிலும் வாங்கிய முன் பணத்தை திருப்பி கொடுக்க முடிவு செய்தேன்.
காழ்ப்புணர்ச்சி காரணமாக அவதூறு
அதற்கு திரு.சலீம் அலிகான் யோசனை செய்துவிட்டு செல்வதாக கூறிச் சென்றார். இந்த நிலையில் கோயம்பேடு காவல் நிலையத்தில் என் மீது மோசடி புகார் அளித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்திருப்பதை அறிந்து இந்த விளக்கத்தை கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது சமீர் அலிகான் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தானாக அல்லது சிலரின் தூண்டுதலின் பேரில் என்னைப் பற்றி தவறாகவும், என்னிடமிருந்து பணம் பறிக்கும் தீய எண்ணத்துடன் அவதூறு செய்தியை பரப்பி வருவது உறுதியாகத் தெரிகிறது.
அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பேன்
சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து இதுவரை அழைப்பாணை எதுவும் கிடைக்கப் பெறவில்லை. அழைப்பாணை கிடைக்கப்பெற்றதும், அந்த புகாரில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை முழுமையாக அறிந்து கொண்டு எனது விளக்கத்தை தேவையான நேரத்தில் காவல்துறைக்கும், ஊடகங்களுக்கும் வழங்குவேன். என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றுள்ள அனைவரும் மீதும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.