Schoolmates : இந்த தமிழ் சினிமா பிரபலங்கள் எல்லாம் ஸ்கூலில் ஒன்றாக படித்தவர்களா?
தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களாக இருக்கும் சிலர் பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர். அவர்கள் யார்.. யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Tamil Cinema Celebrities who are schoolmates
சினிமா பிரபலங்களில் சிலர் நடிக்க வரும் முன்பே நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். அப்படி பள்ளிப்பருவத்தில் இருந்து ஒன்றாக படித்த சிலர் இன்று சினிமாவிலும் முன்னணி நடிகர்களாக ஜொலிக்கிறார்கள். அந்த வகையில் ஒன்றாக பள்ளியில் படித்து தற்போது சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் பிரபலங்கள் சிலரைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரே பள்ளியில் படித்த சூர்யா - மகேஷ் பாபு
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரும் தெலுங்கு திரையுலகில் பிளாக்பஸ்டர் நாயகனாக வலம் வரும் மகேஷ்பாபுவும் சென்னையில் ஒரே ஸ்கூலில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். உணவை பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாம். இன்று தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். அதேபோல் மகேஷ் பாபு சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் தான் கல்லூரிப்படிப்பை முடித்தார். அப்போது இவருடன் இயக்குனர் விஷ்ணுவர்தனும் ஒரே கிளாசில் படித்திருக்கிறார். தற்போது இருவரும் நண்பர்களாக இருக்கிறார்கள்.
கார்த்தியும் யுவன் சங்கர் ராஜாவும் ஸ்கூல்மேட்ஸ்
நடிகர் சூர்யாவை போல் அவரது தம்பி கார்த்தியும் பள்ளியில் முன்னணி இசையமைப்பாளர் ஒருவருடன் படித்திருக்கிறார். அந்த இசையமைப்பாளர் வேறுயாருமில்லை யுவன் சங்கர் ராஜா தான். இருவரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே நண்பர்கள். அந்த நட்பு இன்று வரை தொடர்ந்து வருகிறது. இருவருமே திரைப்படங்களில் இணைந்து பணியாற்றுகின்றனர். கார்த்தியின் அறிமுகபடமான பருத்திவீரனுக்கு இசையமைத்தது யுவன் தான். இதையடுத்து பையா, நான் மகான் அல்ல என பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் இருவரும் பணியாற்றி இருக்கிறார்கள். இவர்களுடன் பாரதிராஜாவின் மகன் மனோஜும் படித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி வில்லன் ராணாவின் ஸ்கூல்மேட் இந்த இயக்குனரா?
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பான் இந்தியா அளவில் புகழ் பெற்றவர் ராணா டகுபதி. இவர் பிரபல இயக்குனருடன் பள்ளியில் ஒன்றாக படித்திருக்கிறார். அந்த இயக்குனரின் பெயர் நாக் அஸ்வின். இவர் மகாநடி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து கல்கி என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்து ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் அள்ளினார். தற்போது கல்கி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் பிசியாக உள்ளார் நாக் அஸ்வின். இவரும் நடிகர் ராணா டகுபதியும் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை ஒன்றாக படித்திருக்கிறார்கள்.
துல்கர் சல்மானின் பள்ளித்தோழன் பிருத்விராஜ்
மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் மம்முட்டி. இவரைப்போலவே இவரது மகன் துல்கர் சல்மானும் தற்போது சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருகிறார். துல்கர் சல்மானும், மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனும் பள்ளிப்பருவத்தில் இருந்தே நெருங்கிய தோழர்களாம். இவர்கள் ஸ்கூலில் ஒன்றாக படித்தது மட்டுமின்றி ஒரே ஏரியாவில் வசித்தும் வந்துள்ளனர். இதனால் இவர்களது நட்பு இன்றளவும் தொடர்ந்து வருகிறது. பிருத்விராஜ் சுகுமாரன் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் ஜொலித்து வருகிறார். இவர் கடைசியாக இயக்கிய எம்புரான் திரைப்படம் 350 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனையை படைத்தது.
ஆனந்த் ராஜ் - ஷிவ ராஜ்குமார் நட்பு
தன்னுடைய வில்லத்தனமான நடிப்பால் 90ஸ் கிட்ஸை மிரள வைத்தவர் ஆனந்த் ராஜ். அன்று வில்லனாக பல படங்களில் நடித்த இவர், இன்று காமெடியனாக கலக்கி வருகிறார். ஆனந்த் ராஜும் சூப்பர்ஸ்டாரும் ஒன்றாக படித்தவர்களாம். தமிழ் திரையுலக சூப்பர்ஸ்டார் அல்ல கன்னட திரையுலக சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார். இவர்கள் இருவருமே வாடா போடா என பேசிக்கொள்ளும் அளவுக்கு மிக நெருக்கமான நண்பர்களாம். பள்ளியில் ஒன்றாக படித்த இவர்கள் பின்னாளில் சினிமாவிலும் இணைந்து நடித்தனர். இவர்களது நட்பு இன்று வரை தொடர்ந்து வருகின்றது.
அரவிந்த் சாமி - விஸ்வநாதன் ஆனந்த் பள்ளி நண்பர்கள்
தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி பின்னர் தனி ஒருவன் படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அரவிந்த் சாமி. இவரும் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரும் ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள். பள்ளியில் படிக்கும் போதே ஆனந்த் செஸ்ஸில் கில்லாடி என்றும், ஒரு முறை தான் ஆனந்த் உடன் செஸ் விளையாடி 20 மூவ்வுக்கு மேல் நகர்த்தியதால் அவர் அளவுக்கு தானும் சிறந்த செஸ் பிளேயர் தான் என அரவிந்த் சாமி கருதிக் கொண்டிருக்க, அடுத்த 5 நகர்வுகளிலேயே அரவிந்த் சாமிக்கு செக் வைத்து அவரின் கனவுக்கோட்டையை தகர்த்துவிட்டாராம் ஆனந்த். இந்த தகவலை ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார் அரவிந்த் சாமி.