கோலிவுட் ரிப்போர்ட் : தள்ளாடும் தமிழ் சினிமா; 5 மாதத்தில் வெறும் 6 ஹிட் படங்கள் தானா?
2025 ஆண்டு தற்போது தான் தொடங்கியது போல் உள்ளது. ஆனால் அதற்கு 5 மாதங்கள் கடகடவென சென்றுவிட்டன. இந்த 5 மாதங்களில் கோலிவுட் கொடுத்த ஹிட் படங்கள் பற்றி பார்க்கலாம்.

Tamil Cinema Hit Movies 2025
2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு பெரியளவில் வெற்றிகள் கிடைக்கவில்லை. பாலிவுட், டோலிவுட்டில் அசால்டாக 300 கோடிக்கு மேல் வசூலை அள்ளிவிட்டனர். இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக மலையாளத்தில் கூட எம்புரான் படம் மூலம் 300 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திவிட்டனர். ஆனால் கோலிவுட்டில் இந்த ஆண்டு ஒரு படம் கூட 250 கோடி வசூலை எட்டவில்லை. தற்போது 2025-ம் ஆண்டில் 5 மாதங்கள் கடகடவென ஓடிவிட்டன. இந்த ஐந்து மாதங்களில் வெறும் ஆறு ஹிட் படங்களை தான் கோலிவுட் கொடுத்துள்ளது. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
வசூல் வேட்டையாடிய டிராகன்
ஜனவரி மாதம் பொங்கல் ரேஸில் ஏராளமான படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆனாலும் அதில் விஷால் - சுந்தர் சி கூட்டணியில் வெளியான மதகஜராஜா திரைப்படம் மட்டும் தான் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படம் 50 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இதையடுத்து அம்மாத இறுதியில் வெளிவந்த மணிகண்டனின் குடும்பஸ்தன் திரைப்படமும் வெற்றி வாகை சூடியது. பிப்ரவரியில் அஜித்தின் விடாமுயற்சி பிளாப் ஆனாலும், அம்மாதம் தமிழ் சினிமாவை பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் காப்பாற்றியது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்தது.
மார்ச்சில் சொதப்பிய கோலிவுட்
மார்ச் மாதம் கோலிவுட்டுக்கு ஒரு ஹிட் படம் கூட கிடைக்கவில்லை. அம்மாதம் வெளிவந்த ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன், ரியோவின் ஸ்வீட் ஹார்ட் ஆகிய படங்கள் அட்டர் பிளாப் ஆகின. இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகையன்று விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூலில் சோபிக்கவில்லை. இதனால் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. இதனால் மார்ச் மாதம் ஒரு வெற்றியை கூட பெறவில்லை.
ஏப்ரலில் நம்பிக்கை தந்த குட் பேக் அலி
மார்ச் மாதம் சொதப்பினாலும் ஏப்ரல் மாதம் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தால் தப்பித்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா நடிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 240 கோடிக்கு மேல் வசூலித்தது. நடிகர் அஜித்தின் கெரியரில் அதிக வசூல் அள்ளிய படமும் இதுதான். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு கோலிவுட்டில் அதிகபட்ச வசூல் அள்ளிய திரைப்படமும் குட் பேட் அக்லி தான். இதையடுத்து ஏப்ரலில் எந்த படமும் சோபிக்கவில்லை.
டபுள் ஹிட் கொடுத்த மே மாதம்
மே மாதம் கோலிவுட்டுக்கு சூப்பர் ஹிட் படத்தோடு ஆரம்பமானது. சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மே 1ந் தேதி ரிலீஸ் ஆனது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு சுமார் 80 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இதற்கு அடுத்த படியாக நடிகர் சூரி நடித்த மாமன் திரைப்படம் கடந்த மே 16ந் தேதி திரைக்கு வந்து வெற்றிநடை போட்டு வருகிறது. வெறும் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 30 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதற்கு போட்டியாக வந்த சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல், விஜய் சேதுபதியின் ஏஸ் ஆகிய படங்கள் தோல்வியடைந்தன. அதேபோல் மே 1ந் தேதி வெளிவந்த சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் முதலுக்கு மோசமின்றி தப்பித்தது.