சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் திடீர் சந்திப்பு!
கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இது குறித்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.
தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ஹைதராபாத்தில்.. ஜூப்ளி ஹீல்ஸில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி உள்ளார்.
மேலும் இதுகுறித்து வெளியாகி உள்ள தகவலில், தன்னை சந்திக்க வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, சந்திரபாபு உற்சாக வரவேற்பு அளித்ததோடு.. நீண்ட நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். ஒருவர் ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டதோடு, தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் 'ஜெயிலர்' உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களின் திட்டம் குறித்து சந்திரபாபு நாயுடு விசாரித்ததாகவும், குறிப்பாக ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்தும் விசாரித்ததாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்துடன் இன்று நடந்த சந்திப்பு குறித்து தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, "அன்பு நண்பரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்' என கூறி தங்களுடைய சந்திப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தற்போது ரஜினிகாந்த் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துவரும் 'ஜெயிலர்' திரைப்படம் ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில், மரியாதை நிமித்தமாகவே இவர்கள் சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.