பராசக்திக்கு மரண பயம்காட்டிய ஜனநாயகன்; பொங்கல் ரேஸில் இருந்து எஸ்கேப் ஆகும் எஸ்.கே?
விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

Jana Nayagan vs Parasakthi
நடிகர் விஜய் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கியை கொடுத்த பின்னர் எஸ்.கே-வின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. அதன்பின் அவர் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 350 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதோடு, அடுத்த தளபதி ரேஞ்சுக்கு அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். இதனால் விஜய்யுடனே மோத முடிவெடுத்து தன்னுடைய பராசக்தி திரைப்படத்தை மெருகேற்றி வந்தார் சிவாகார்த்திகேயன். இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜன நாயகன் படத்துடன் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.
ஜன நாயகன் ரிலீஸில் திடீர் மாற்றம்
ஏற்கனவே ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. அது விஜய்யின் கடைசி படம் என்பதால் அதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் ஜன நாயகன் உடன் ஜனவரி 9-ந் தேதி வெளியிட்டால் பராசக்தி பாக்ஸ் ஆபிஸில் செம அடிவாங்கும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது அதன் ரிலீஸ் தேதியை சற்று தள்ளிவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆகி 3 நாட்களுக்கு பின்னர் பராசக்தி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விறுவிறுவென தயாராகும் பராசக்தி
பராசக்தி திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். மேலும் பேசில் ஜோசப், ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இது நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பை சிதம்பரம், இலங்கை என பல்வேறு பகுதிகளில் நடத்திய படக்குழு, தற்போது சென்னையில் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகின்றது.
சிவகார்த்திகேயன் கைவசம் உள்ள படங்கள்
சிவகார்த்திகேயன் கைவசம் பராசக்தி மட்டுமின்றி மதராஸி உள்பட மூன்று படங்கள் உள்ளன. அதில் மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். அனிருத் அப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுதவிர குட் நைட் பட இயக்குனர் விநாயக் இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் என சிவகார்த்திகேயனின் லைன் அப் நீண்டுகொண்டே செல்கிறது. தற்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் எஸ்.கே. இவர் தற்போது ஒரு படத்துக்கு 70 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம்.