ரோபோ சங்கர் மறைவு.! ஸ்டாலின் முதல் இபிஎஸ் வரை இரங்கல்
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார். அவரது திடீர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரோபோ சங்கர், 1978 டிசம்பர் 24 அன்று மதுரையில் பிறந்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர், 2007இல் ஜெயம் ரவியின் தீபாவளி படத்தில் அறிமுகமானார். மாரி, இரும்புத்திரை, வேலைக்காரன், புலி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு படப்பிடிப்பின் போது மயக்கம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
மஞ்சள் காமாலை நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு திரைப்படத் துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ரோபோ சங்கர் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ரோபோ சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்,.
அதிமு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான ரோபோ ஷங்கர் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்புச் சகோதரர் ரோபோ சங்கர் அவர்களின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்,