ஷாக்கிங் நியூஸ் – ரோபோ சங்கர் மறைவு; உடல் உறுப்புகள் செயலிழந்து கோமா நிலைக்கு சென்றாரா?
Robo Shankar Goes into Coma Stage : காமெடி நடிகர் ரோபோ சங்கர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து கடைசியாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

ரோபோ சங்கர் காலமானார்
நடிகர் ரோபோ சங்கர் மதுரையைச் சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். ரோபோ சங்கர் நடிகர், ஸ்டாண்ட் அப் காமெடியன், டான்ஸராக தன்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார். விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ரோபோ சங்கருக்கு, அந்த நிகழ்ச்சியில் ரோபோ கெட்டப் போட்டதால் ரோபோ சங்கர் என்று அழைக்கப்பட்டார்.
ரோபோ சங்கருக்கு அடையாளம் காட்டாத படங்கள்
ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக அவர் தர்ம சக்கரம், படையப்பா, ஜூட், உயிரோசை, ஏய் போன்ற படங்களில் சினிமா நடித்துள்ளார். ஆனால், இந்தப் படங்களில் அவரது கதாபாத்திரங்கள் பெரிதாக பேசப்படவில்லை. இது போன்று ஒரு சில படங்களில் நடித்திருந்த ரோபோ சங்கருக்கு தனுஷின் மாரி படம் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
ரோபோ சங்கர் படங்கள்
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, சிங்கம் 3, கலகலப்பு 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், மாரி 2, விஸ்வாசம், மிஸ்டர் லோக்கல், ஹீரோ, கோப்ரா, தேசிங்கு ராஜா 2, சொட்ட சொட்ட நனையுது ஆகிய படங்களில் நடித்துள்ளார். கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலக்கப்போவது யார் காமெடியன் முதல் அம்பி பட கதாநாயகன் வரை... அசத்திய ரோபோ சங்கர்
டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 - Elimination
கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 என்ற ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். கடந்த வாரத்திற்கு முன்னதாக நடைபெற்ற எலிமினேஷன் சுற்று போட்டியில் அவர் எலிமினேட் செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சியிலிருந்து செல்லும் போது விசில் அடித்துக் கொண்டே சென்றார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
இந்த நிலையில் தான் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்த நிலையில் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு அங்கிருந்து பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு மருத்துவ உதவிகள்
மேலும், வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், தொடர்ந்து உடலில் ஒவ்வொரு உறுப்புகள் செயலிழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் தான் இன்று இரவு 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரோபோ சங்கரின் மறைவு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமல் ஹாசன், பார்த்திபன், தாடி பாலாஜி என்று பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.