எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு நாள்... எஸ்.பி.பி.யின் சாதனைகள் ஒரு பார்வை
பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்த மண்ணுலகை விட்டு மறைந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், திரைத்துறையில் அவர் படைத்த சாதனைகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

SP Balasubrahmanyam Death Anniversary
இந்திய இசை உலகில் ஈடு இணையற்ற பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. அவர் விட்டுச்சென்ற இசையின் மூலம் எஸ்பிபி இன்றும் வாழ்கிறார். ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் தான் செல்லமாக எஸ்பிபி என அழைக்கப்படுகிறார். தன் பாடல் மூலம் தேசம், மொழி எல்லைகளைக் கடந்து அனைவரின் பாலுவாக மக்கள் மனதில் இடம்பிடித்து இருந்தார்.
எஸ்பிபி வென்ற விருதுகள்
எந்தப் பாடலையும் எளிதாகப் பாடும் பாடகர். நாற்பது ஆண்டுகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது. பல்வேறு மாநிலங்களின் எண்ணற்ற விருதுகள். பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளையும் வழங்கி இந்திய அரசே அவரை கௌரவித்தது. அதிக பாடல்களைப் பாடி சாதனை படைத்த பின்னணிப் பாடகர் என்ற பெருமையும் எஸ்பிபிக்கு உண்டு.
பன்முகத் திறமை கொண்ட எஸ்பிபி
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், அசாமி, ஒரியா, பெங்காலி, இந்தி, சமஸ்கிருதம், துளு, மராத்தி, பஞ்சாபி என எஸ்பிபி-யின் குரல் தொடாத மொழிகளோ, மனிதர்களோ இல்லை. பாடகர், இசையமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர் என பன்முகத் திறமை கொண்டவர். எல்லாவற்றிற்கும் மேலாக, சிறிதளவும் தலைக்கனம் இல்லாத மனிதர்.
அஜித்துக்கு எஸ்பிபி செய்த உதவி
எஸ்பிபி பல்வேறு இளைஞர்களுக்கு உதவி இருக்கிறார். குறிப்பாக கடந்த 1983-ம் ஆண்டு இந்திய செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திற்கு ஸ்பான்சர் செய்திருந்தார். சொல்லப்போனால் ஆனந்தின் கெரியருக்கு எஸ்பிபி செய்த உதவி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதேபோல் நடிகர் அஜித்தை சினிமாவில் ஹீரோவாக நடித்த பிரேம புஷ்தகம் என்கிற படத்திற்கு அவரை சிபாரிசு செய்ததே எஸ்பிபி தான். இப்படி அவர் செய்த உதவிகள் ஏராளம்.
எஸ்பிபியின் சாதனைகள்
1981-ல் 12 மணி நேரத்தில் 21 கன்னடப் பாடல்களைப் பாடி சாதனை படைத்தார். பின்னர் ஒரே நாளில் 19 தமிழ்ப் பாடல்களையும், மற்றொரு சமயம் 16 இந்திப் பாடல்களையும் பாடினார். இதுபோன்று இனி யாரால் செய்ய முடியும்? காதலிக்கவும், நடனமாடவும், தாலாட்டவும், எழுப்பவும் இன்றும் எஸ்பிபி-யின் குரல் நம்முடன் இருக்கிறது. ஒரு நிலவு பொழிவது போல.