என்னது நான் திடீர் தளபதியா? ட்ரோல் செய்தவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் எஸ்.கே. என்ன பேசினார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Sivakarthikeyan Speech in Madharasi Audio Launch
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மதராஸி. இப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேச வந்த சிவகார்த்திகேயன், தன்னுடைய ரசிகர்கள் பற்றியும், தன்மீதான விமர்சனங்கள் பற்றியும் மனம்திறந்து பேசி இருக்கிறார்.
என்னோட பேன்ஸ் எல்லாருமே லாயல்
அவர் பேசியதாவது : “மற்ற நடிகர்களின் ரசிகர்களை அவ்ளோ ஈஸியா நம்ம பக்கம் திருப்ப முடியாது. விஜய் சார் அரசியலுக்கு போனாலும், அஜித் சார் பேன்ஸ் கிளப் களைச்சாலும், கமல் சார் வெற்றி தோல்வி தாண்டி வந்தாலும், ரஜினி சினிமாவுக்கு வந்து 50 வருஷம் ஆனாலும் அவங்களுக்கான பேன்ஸ் அப்படியே தான் இருக்கு. அவங்களுக்கு அப்புறம் சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு-ன்னு எல்லோருக்குமே பேன்ஸ் இருக்காங்க. எனக்கும் கொஞ்சம் அந்த மாதிரி பேன்ஸ் சேர்ந்துட்டு வர்றாங்க. பேன்ஸ் எல்லோருமே லாயல். யாரையும் அவ்ளோ ஈஸியா தூக்கிட முடியாது” என சிவகார்த்திகேயன் கூறினார்.
விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்
தன்னைப் பற்றிய விமர்சனங்கள் பற்றி பேசிய எஸ்.கே, “ஒரு படம் நல்லா இருக்கு, எனக்கு புடிச்சு இருக்குன்னா கூப்டு பாராட்டினா, இவன் என்ன அவ்ளோ பெரிய ஆளான்னு கேக்குறாங்க. நல்லது பண்றதுக்கு நான் ஏன் யோசிக்கனும். GOAT படத்துக்கு அப்புறம் நிறைய பேர் குட்டி தளபதி , திடீர் தளபதின்னு சொன்னாங்க. அதெல்லாம் இல்ல. என்னைக்குமே அண்ணன் அண்ணன் தான், தம்பி தம்பி தான்” என சிவகார்த்திகேயன் கூறினார். முன்னதாக அவரை ப்ளூ சட்டை மாறன் தான் திடீர் தளபதி என விமர்சித்து இருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் எஸ்.கே. இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
ஆசை நிறைவேறியது
தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், “ஏ.ஆர்.முருகதாஸ் சார் தயாரிப்பில் நான் மான் கராத்தே நடித்தேன். அந்த படத்தோட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முருகதாஸ் மற்றும் இயக்குனர் ஷங்கர் வந்திருந்தார்கள். அன்று பேசும்போது சொன்னேன். என்றாவது ஒரு நாள் நான் முருகதாஸ் மற்றும் ஷங்கர் சார் டைரக்ஷன்ல நடிக்கனும்னு சொன்னேன். அதற்காக என்னுடைய திறமையையும், வியாபாரத்தையும் நிச்சயமா வளர்த்துக்குவேன்னு சொன்னேன். அப்போ 2 படம் ஹிட் ஆன உடனே உனக்கு முருகதாஸ் படம் கேக்குதானு கிண்டல் செய்தார்கள். ஆனால் அன்றைக்கு நம்பிக்கை மட்டும் இருந்தது. நீங்க கைதட்டிகிட்டே இருந்தீங்க, நான் ஓடிக்கிட்டே இருந்தேன். இன்னைக்கு நான் ஆசைப்பட்டபடி மதராஸியில் ஏ.ஆர்.முருகதாஸ் சார் டைரக்ஷன்ல நான் ஹீரோவாக இங்க நின்னு பேசிட்டு இருக்கேன்” என கூறினார்.