ஒரு மாதத்திற்குள் ஓடிடிக்கு பார்சல் பண்ணி அனுப்பப்பட்ட மதராஸி - எப்போ ரிலீஸ் தெரியுமா?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

Madharaasi OTT Streaming Date
அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த படம் மதராஸி. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும் பிஜு மேனன், வித்யூத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் கடந்த செப்டம்பர் 05-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் கம்பேக்
மதராஸி திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு கம்பேக் படமாக அமைந்துள்ளதாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. ஏனெனில் இந்த ஆண்டு அவர் இந்தியில் சல்மான் கானை வைத்து இயக்கிய சிக்கந்தர் திரைப்படம் வெளியாகி அட்டர் பிளாப் ஆனது. அதனால், ஏ.ஆர்.முருகதாஸ் பார்ம் அவுட் ஆகிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்த அவருக்கு, மதராஸி திரைப்படத்தின் வெற்றி நிம்மதி அளித்தது. தமிழிலும் தர்பார் பட தோல்விக்கு பின் சுமார் 6 ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த அவருக்கு பக்கா ரீ-எண்ட்ரி படமாக மதராஸி அமைந்தது.
மதராஸி பாக்ஸ் ஆபிஸ்
மதராஸி திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தாலும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவு சோபிக்கவில்லை. குறிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. ஆனால் மதராஸி திரைப்படம் அதில் பாதி கூட வசூலிக்கவில்லை. இப்படம் ஒட்டுமொத்தமாகவே ரூ.100 கோடி தான் வசூலித்து இருந்தது. இத்தனைக்கும் இப்படத்திற்கு போட்டியாக பெரிய படங்கள் எதுவுமே ரிலீஸ் ஆகவில்லை. இருப்பினும் இப்படம் கம்மியான வசூலையே குவித்திருந்தது.
மதராஸி ஓடிடி ரிலீஸ்
இந்த நிலையில், தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டுள்ள மதராஸி திரைப்படம் தற்போது ஓடிடிக்கு தாவி இருக்கிறது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 1ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என நடிகர் சிவகார்த்திகேயனே அறிவித்து இருக்கிறார். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் அன்றைய தினம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.