முதன்முறையாக திருநங்கையாக நடிக்கும் சிம்பு; அதுவும் இந்த படத்திலா?
தக் லைஃப் படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ள சிம்பு, தான் அடுத்த படத்தில் திருநங்கையாக நடிக்க உள்ளதாக கூறி இருக்கிறார்.

Simbu Role in STR 50 Revealed
நடிகர் சிம்பு, கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்துள்ள புதிய படமான 'தக் லைஃப்' வருகிற ஜூன் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த புரமோஷன் நிகழ்வின்போது, தனது அடுத்த படமான 'STR 50' பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் சிம்பு பகிர்ந்து கொண்டார். அதில் அவரது ரோல் எப்படி இருக்கும் என்பதையும் முதன்முறையாக கூறி இருக்கிறார் சிம்பு.
திருநங்கையாக நடிக்கும் சிம்பு
அதன்படி இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று சிம்பு தெரிவித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, "இந்தப் படத்தில் ஒரு திருநங்கை கதாபாத்திரம் உள்ளது. அதை எப்படி அணுகுவது என்பது குறித்து கமல்ஹாசன் சாருடன் கலந்துரையாடினேன். இதுபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைக்கும்போதுதான் ஒரு நடிகரின் உண்மையான திறமை வெளிப்படும்" என்று சிம்பு கூறினார். தனது 50வது படமான இதை, தனது சொந்த நிறுவனமான ஆத்மன் சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கைமாறிய சிம்பு படம்
சொந்த தயாரிப்பு பற்றி சிம்பு கூறுகையில் "நானே தயாரிப்பது நல்லது என்று நினைக்கிறேன். சமரசம் இல்லாமல் நான் நினைக்கும் விதத்தில் படத்தை உருவாக்க முடியும்" என்று விளக்கம் அளித்தார். சுவாரஸ்யமாக, 'STR 50' படத்தை முதலில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்தப் படம் கைவிடப்பட்டது. அதன்பின்னர் தான் சிம்புவே அப்படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.
சிம்பு படத்தை கமல் கைவிட்டது ஏன்?
"'தக் லைஃப்' படத்திற்கு சிம்பு தேவைப்பட்டதால், முந்தைய படத்தை கைவிட்டோம். அவர்கள் இன்னும் அதைச் செய்யலாம், அது ஒரு அழகான கதை" என்று அதே பேட்டியில் கமல்ஹாசன் கூறினார். நீண்டகாலமாக சிம்பு படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா 'STR 50' படத்துக்காக மீண்டும் சிம்புவுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிங்கு பெரியசாமி இயக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.