தனுஷ், விஜய் சேதுபதி, அமலாபால் உள்ளிட்ட 14 நடிகர்களுக்கு ரெட் கார்டு ? அப்பு வைக்க தயாரான தயாரிப்பாளர் சங்கம்
தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் விதத்தில், செயல்பட்ட நடிகர் தனுஷ் உள்ளிட்ட 14 நடிகர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று, சமீபத்தில் இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவியேற்ற தேனாண்டாள் முரளி, தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் இருந்து மீட்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தயாரிப்பாளர்கள் நலன் கருதி, இப்படி எடுக்கப்படும் முடிவுகளுக்கு, சங்கத்தை சேர்ந்த அனைவருமே தங்களுடைய வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், திரைப்படம் நடிக்க முன்பணம் பெற்றுக்கொண்டு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் சில நடிகர்கள் இழுத்தடிப்பது பற்றியும் கால்ஷீட் வழங்கிய நாட்களில் நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால், உரிய நேரத்தில் படத்தை எடுத்து முடியாமல், அது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து பல தயாரிப்பாளர்கள் கூறிய புகாரை தொடர்ந்து, ஏற்கனவே சிம்பு, விஷால், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, அதர்வா, ஆகிய ஐந்து பேருக்கு ரெட் கார்ட் விதிக்கப்படுவது தொடர்பாக ஒரு பேச்சு அடிபட்டு வரும் நிலையில், தற்போது இந்த பட்டியலில் மேலும் சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில், நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, அமலாபால், லட்சுமி ராய் உள்ளிட்ட பிரபலங்கள் உட்பட 14 பிரபலங்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த 14 பேரிடமும், உரிய விளக்கம் கேட்டு... ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தயாரிப்பாளர்களின் செலவுகளை குறைக்கும் விதமாக, நடிகைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் பவுன்சர்களுக்கு, தயாரிப்பாளர்கள் சம்பளம் வழங்க மாட்டார்கள் என்றும், நடிகைகள் அழைத்து வரும் பாதுகாவலர்களுக்கு அவர்களே தான் சம்பளம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.