பக்கத்து வீட்டு பெண் மண்டை உடைப்பு - ஜிபி முத்து மற்றும் அவர் மனைவி மீது பரபரப்பு புகார்!
Complaint Filed Against GP Muthu and His Wife: ஜி பி முத்து மற்றும் அவருடைய மனைவி, உள்ளிட்ட நான்கு பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து:
டிக் டாக் மோகம் தலைவிரித்தாடிய போது... தினுசு தினுசாக வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் ஜி பி முத்து. ஆபாசமான வார்த்தைகளை பேசி பல சர்ச்சைகளில் இவர் சிக்கி இருந்தாலும், தன்னுடைய நெகடிவ் விமர்சனத்தை கொண்டு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கு பெற துவங்கினார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாட துவங்கிய ஒரே வாரத்தில் தன்னுடைய குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்கிற காரணத்தாலும், தன்னுடைய குடும்பத்தை பிரிந்து தன்னால் இருக்க முடியாது என அழுது புரண்டு வெளியே வந்தார்.
ஜிபி முத்துவின் வளர்ச்சி:
இவரின் இந்த இளகிய மனம், இவருடைய இமேஜை ஒட்டுமொத்தமாக மாற்றியது. இதைத் தொடர்ந்து தற்போது 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியில் டூப் புக்காக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி கடை திறப்பு விழாக்களிலும், சில திரைப்படங்களிலும் காமெடி ரோல்களில் நடித்து வருகிறார்.
சர்ச்சையில் சிக்கிய ஜிபி முத்து மற்றும் அவர் மனைவி:
ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள பெருமாள் புரம் எனும் கிராமத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி, ஜி பி முத்து மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட நான்கு பேர் பக்கத்து வீட்டு பெண்ணை மண்டை உடையும் அளவுக்கு அடித்ததாகவும், பற்கள் உடைத்ததாகவும் கூறி பால அமுதா என்கிற பெண் புகார் கொடுத்துள்ளார்.
முத்துவின் மகன்களை திட்டிய பக்கத்துவீட்டுக்காரர்!
சம்பவத்தன்று ஜிபி முத்துவின் இரண்டு மகன்களும், தெருவில் ஓடி விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த முத்து மகேஷ் என்கிற பக்கத்து வீட்டுக்காரர், அந்த இரண்டு குழந்தைகளையும் ஏளனம் செய்வது போல... ஏன் இப்படி திரிந்து கொண்டிருக்கிறீர்கள்? உங்க அப்பா மாதிரியே ஆகப்போறிங்களா? என்று சில ஆபாச வார்த்தைகளுடன் திட்டியதாக சொல்லப்படுகிறது. இது பற்றி மகன்கள் அவர்களுடைய பெற்றோரான ஜி பி முத்து மற்றும் அவருடைய மனைவியிடம் சொல்ல, அவர்கள் பக்கத்து வீட்டுக்கு தங்களின் உறவினர்களுடன் சென்று சண்டை போட்டுள்ளனர்.
பக்கத்துவீட்டு பெண் மண்டை உடைப்பு:
இந்த சண்டையின் போது முத்து மகேஷின் மனைவி பால அமுதாவை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மண்டை உடைந்து, பற்கள் உடைந்து பலத்த காயங்கள் அவருக்கு ஏற்பட்டதாம். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன்னை தாக்கிய நான்கு பேர் மீது, பால அமுதா கொடுத்த புகாரி பேரில்... மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குலசேகரப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜிபி முத்து கொடுத்த விளக்கம்:
இது குறித்து ஜி பி முத்து கூறுகையில்... " தங்கள் மீது பொய் புகார் கொடுத்துள்ளனர். இதனை சட்டரீதியாக சந்திக்க போகிறேன் என தெரிவித்துள்ளார். ஊருக்குள் நடக்கும் சில அநியாயங்களை துணிந்து தட்டி கேட்டதால் தன்னை பழிவாங்கும் நோக்கில் இதுபோல் செயல்படுவதாகவும் கூறி உள்ளார். அதேபோல் தன்னுடைய மகன்கள் இருவரையும் முத்து மகேஷ் தாக்கியதன் காரணமாகவே இது குறித்து கேட்க அவர்கள் வீட்டுக்கு சென்றதாகவும் மற்றபடி எங்கள் மீது எந்த தவறும் இல்லை என கூறியுள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் யார் சொல்வது உண்மை என தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.