ஷாலினி முதல் அசின் வரை... கல்யாணம் ஆனதும் சினிமாவில் இருந்து விலகி குடும்ப குத்துவிளக்காக மாறிய நடிகைகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த ஹீரோயின்கள் சிலர் திருமணம் முடிந்ததும் சினிமாவை விட்டு விலகி சென்றுள்ளனர். அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சினிமா என்பது ஒருவருக்கு எந்த நேரத்தில் புகழை பெற்றுத் தரும் என்பது தெரியாது. ஒருவேளை புகழடைந்துவிட்டால் அவர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவு உயரத்திற்கு கொண்டு செல்லும். அதேவேளையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக வலம் வந்த சிலர், கல்யாணம் ஆனதும் சினிமாவை விட்டு விலகி குடும்பத்துடன் செட்டில் ஆன சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. அப்படி சினிமாவுக்கு முழுக்கு போட்ட நடிகைகளைப் பற்றி பார்க்கலாம்.
ஷாலினி அஜித்குமார்
90-களின் பிற்பாதியில் தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்ட நடிகைகளில் ஷாலினியும் ஒருவர். இவர் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவர் நடித்த படங்கள் பெரும்பாலானவை பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. அப்படி லக்கி ஹீரோயினாக வலம் வந்த ஷாலினி கடந்த 2000-ம் ஆண்டு நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகிய ஷாலினி அதன்பின் படங்களில் தலைகாட்டவே இல்லை. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன.
அசின்
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான விஜய், அஜித், கமல், சூர்யா ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்தவர் தான் அசின். இவர் நடித்த போக்கிரி, தசாவதாரம், வரலாறு, கஜினி ஆகிய படங்கள் இன்றளவும் கொண்டாடப்படுகின்றன. இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் கம்பெனியின் நிறுவனம் ராகுல் ஷர்மா உடன் திருமணம் ஆனது. திருமணத்துக்கு பின் குடும்பத்துடன் செட்டில் ஆன அசின் அதன் பின் நடிக்கவே இல்லை.
ரிச்சா கங்கோபாத்யா
தமிழ், தெலுங்கில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே மளமளவென உச்சத்தை தொட்ட நடிகைகளில் ரிச்சாவும் ஒருவர். இவர் தமிழில் சிம்புவுடன் ஒஸ்தி, தனுஷின் மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கில் பிரபாஸ், ராணா, வெங்கடேஷ், ரவி தேஜா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் 2013-ம் ஆண்டு படிப்பதற்காக சினிமாவை விட்டு விலகினார். அதன்பின் 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ரிச்சா, அதன்பின் சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை.
இதையும் படியுங்கள்... யோகிபாபு இல்ல ஆனா இந்த காமெடி நடிகர் இருக்காராம்... விஜய்யின் லியோ படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்
ரீமா சென்
கவுதம் மேனன் இயக்கிய மின்னலே படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் ரீமா சென். இதையடுத்து விஜய், விக்ரம், விஷால், மாதவன், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவரின் சினிமா கெரியர் 10 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2012-ம் ஆண்டு திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகினார் ரீமாசென்.
சனா கான்
சிம்புவின் சிலம்பாட்டம் படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தவர் தன் சனா கான். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து பேமஸ் ஆன நடிகையாக வலம் வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு விஷாலின் அயோக்கியா திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடிய இவர் அதன்பின் சினிமாவுக்கு குட் பாய் சொல்லிவிட்டு முஃப்தி அனாஸ் சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
இதையும் படியுங்கள்... அன்றும்... இன்றும்! ‘மிஸ்டர் களவானி காமன்மேன்’ என கமலை விமர்சித்து மாரி செல்வராஜ் எழுதிய காட்டமான கடிதம் இதோ