- Home
- Cinema
- பீஸ்ட்-ஐ தொடர்ந்து பாலிவுட் படத்தையும் பதம் பார்த்த ராக்கி பாய்... கே.ஜி.எஃப் 2-வால் மரண அடி வாங்கிய ஜெர்ஸி
பீஸ்ட்-ஐ தொடர்ந்து பாலிவுட் படத்தையும் பதம் பார்த்த ராக்கி பாய்... கே.ஜி.எஃப் 2-வால் மரண அடி வாங்கிய ஜெர்ஸி
KGF 2 vs Jersey : முதலில் கே.ஜி.எஃப் 2 படத்திற்கு போட்டியாக தான் ஜெர்ஸி படம் வெளியாக இருந்தது. பின்னர் கே.ஜி.எஃப் 2 படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு ஜெர்ஸி படத்தை ஒரு வாரம் தள்ளி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்தனர்.

பாலிவுட் திரையுலகில் வெற்றிபெற்ற படங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட காலம் போய், தற்போது பிற மொழி படங்களை இந்தியில் ரீமேக் செய்யும் அளவுக்கு பாலிவுட்டில் கதைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு தற்போது விக்ரம் வேதா, கைதி, மாநகரம், திருட்டுபயலே 2 போன்ற படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.
இதுதவிர தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற ஜெர்ஸி திரைப்படம் தற்போது அதே பெயரில் இந்தியில் ரீமேக் ஆகி உள்ளது. ஷாகித் கபூர் நாயகனாக நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 22-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கை போல் இந்தியிலும் படம் நன்றாக வந்துள்ளதாக பாசிடிவ் விமர்சனங்கள் வந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கி உள்ளது இப்படம்.
ஜெர்ஸி படத்தின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் யாஷின் கே.ஜி.எஃப் 2 படம் தான். இப்படம் வெளியாகி 10 நாட்களுக்கு மேல் ஆன போதும் இதற்கான மவுசு இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாக இந்தியில் இப்படம் வசூல் ராஜ்ஜியம் நடத்தி வருகிறது. இதுவரை இந்தியில் மட்டும் இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் கே.ஜி.எஃப் 2 படத்திற்கு போட்டியாக தான் ஜெர்ஸி படம் வெளியாக இருந்தது. பின்னர் கே.ஜி.எஃப் 2 படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு ஜெர்ஸி படத்தை ஒரு வாரம் தள்ளி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்தனர். தற்போது அவர்களை இன்னும் ஒரு வாரம் தள்ளி ரிலீஸ் செய்திருக்கலாமோ என எண்ண வைத்துவிட்டது கே.ஜி.எஃப் 2 திரைப்படம்.
ஷாகித் கபூர் இதற்கு முன் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் நடித்திருந்தார். அப்படம் இந்தியில் வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூலித்தது. இதனால் ஜெர்ஸி படமும் அவ்வாறு வசூலிக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த படக்குழுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படம் முதல் நாளில் ரூ.4 கோடி மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... Pushpa : டி.ஆர்.பி-யில் அடிச்சு தூக்கிய புஷ்பா... முதன்முறையாக விஜய்யை பீட் பண்ணி கெத்து காட்டிய அல்லு அர்ஜுன்