- Home
- Cinema
- DNA முதல் சட்டமும் நீதியும் வரை; இந்த வார OTT ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் & வெப் தொடர் லிஸ்ட்
DNA முதல் சட்டமும் நீதியும் வரை; இந்த வார OTT ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் & வெப் தொடர் லிஸ்ட்
சட்டமும் நீதியும் என்கிற வெப் தொடர் தொடங்கி அதர்வா நடித்த டிஎன்ஏ வரை இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வெப் தொடர் மற்றும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

July 18 OTT Release Movies and Web Series
தமிழ் சினிமாவில் வார வாரம் புதுப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆவதைப் போல், ஓடிடியிலும் ஏராளமான படங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் வருகிற ஜூலை 18ந் தேதியும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்கள் ஸ்ட்ரீம் ஆக காத்திருக்கின்றன. அது என்னென்ன படங்கள்... எந்தெந்த ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை இந்த பட்டியலில் பார்க்கலாம்.
சட்டமும் நீதியும்
நடிகர் சரவணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப் தொடர் சட்டமும் நீதியும். இந்த வெப் தொடரை பாலாஜி செல்வராஜ் இயக்கி உள்ளார். இந்த வெப் தொடரில் நம்ரிதா நாயகியாக நடித்துள்ளார். குற்ற வழக்கு, சட்டம், நீதிமன்றம் போன்றவற்றை மையமாக வைத்து இந்த வெப் தொடர் உருவாகி உள்ளது. இந்த வெப் தொடர் வருகிற ஜூலை 18ந் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இந்த வெப் தொடரை சசிகலா பிரபாகரன் தயாரித்து உள்ளார்.
படைத் தலைவன்
நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் ஷண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடித்து திரைக்கு வந்த படம் படைத் தலைவன். இப்படத்தை அன்பு இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. தியேட்டரில் போதிய வரவேற்பை பெறாத இப்படம் தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. வருகிற ஜூலை 18ந் தேதி முதல் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் படைத் தலைவன் திரைப்படம் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
குபேரா
தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் குபேரா. இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷ் உடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.125 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. தியேட்டரில் ஹிட்டான குபேரா திரைப்படம் வருகிற ஜூலை 18ந் தேதி ஓடிடிக்கு வருகிறது. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மனிதர்கள்
ராம் இந்திரா இயக்கிய சிறு பட்ஜெட் படம் தான் மனிதர்கள். கபில் வேலவன், குணவேந்தன் ஆகியோர் நடித்துள்ளனர். கோவில் திருவிழாவின் போது குடி போதையில் நண்பர்களுக்கு இடையே நடக்கும் மோதலில் ஒருவர் இறக்கிறார். அவரை யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டு தப்பிக்க மற்றவர்கள் முடிவு செய்த பின் அவர்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதே இப்படத்தின் ஒன் லைன். இப்படம் ஜூலை 18ந் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
டிஎன்ஏ
நடிகர் அதர்வா நாயகனாக நடித்து வெற்றிபெற்ற படம் டிஎன்ஏ. இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருந்தார். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்திருந்தார். இப்படம் வருகிற ஜூலை 19ந் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மற்ற மொழி படங்கள்
தெலுங்கில் பைரவம் என்கிற திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல் இந்தியில் The Bhootnii திரைப்படம் ஜீ5-ல் ரிலீஸ் ஆகிறது. Special OPS என்கிற வெப் தொடரின் இரண்டாவது சீசன் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதுதவிர Strange New Worlds என்கிற ஆங்கிலப் படம் ஜியோ ஹாட்ஸ்டாரிலும், Trigger மற்றும் Untamed என்கிற ஆங்கிலப் படங்கள் நெட்பிளிக்ஸிலும், Riff Raff என்கிற இங்கிலீஷ் படம் அமேசான் பிரைமிலும் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.