நிஜத்திலும் சூப்பர் அம்மா.! மகள்களை மருத்துவராக்கிய நடிகை சரண்யா பொன்வண்ணன்
தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களுக்கு அடையாளமாக திகழ்ந்து வருபவர் சரண்யா பொன்வண்ணன். சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சூப்பர் அம்மா என்பதை நிரூபிக்கும் வகையில் தனது இரு மகள்களையும் அவர் மருத்துவர் ஆக்கி அழகு பார்த்துள்ளார்.

Actress Saranya Ponvannan
ஷீலா கிறிஸ்டினா என்கிற இயற்பெயர் கொண்ட சரண்யா மலையாளத் திரைப்பட இயக்குனர் ஏ.பி ராஜின் மகளாவார். இவருடைய குடும்பம் கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்தது. சரண்யா மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ (1987) திரைப்படத்தில் கமலஹாசனுக்கு நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். 1987 முதல் 1996 ஆம் ஆண்டு வரை கதாநாயகியாக பல படங்களில் நடித்தார். 1994-ல் ‘கருத்தம்மா’ திரைப்படத்தில் பொன்வண்ணனுடன் இணைந்து நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அம்மா கதாபாத்திரங்களில் கலக்கும் சரண்யா
இந்த தம்பதிகளுக்கு பிரியதர்ஷினி, சித்ரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக திரைத்துறையில் இருந்து 8 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டார் சரண்யா. அதன்பின்னர் 2003 ஆம் ஆண்டு ‘அலை’ படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினர். மீண்டும் திரைத்துறைக்கு திரும்பிய பின்னர் பெரும்பாலும் அவர் அம்மா கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அம்மா கதாபாத்திரம் என்றாலே சரண்யா பொன்வண்ணனை இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு அம்மா கதாபாத்திரங்களை சிறப்பாக ஏற்று நடித்தார்.
சரண்யா பொன்வண்ணன் பெற்ற விருதுகள்
சரண்யா பொன்வண்ணன் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றிருக்கிறார். ‘தவமாய் தவமிருந்து’, ‘எம் மகன்’, ‘நீர்ப்பறவை’, ‘கோலமாவு கோகிலா’ போன்ற படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது ‘கேங்ஸ்டர் கிராணி’ என்கிற தமிழ் படத்திலும், ‘பா பா பா’ என்கிற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். சரண்யாவும் அவரது கணவர் பொன்வண்ணனும் திரைத்துறையில் இருக்கும் நிலையில் தங்களது மகள்களை சினிமா துறைக்குள் அனுமதிக்காமல் இருவரையும் மருத்துவம் படிக்க வைத்துள்ளனர்.
இரு மகள்களையும் மருத்துவராக்கிய சரண்யா
இவர்களில் மூத்த மகள் குழந்தைகள் நல மருத்துவராக உள்ள நிலையில், இளைய மகள் பொதுநல மருத்துவராக பட்டம் பெற்றிருக்கிறார். மகள் பட்டம் பெற்ற புகைப்படங்களை சரண்யா பொன்வண்ணன் இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த சரண்யாவின் மகள்கள், “வீட்டில் அம்மா மிகவும் கண்டிப்புடன் இருப்பார். நாங்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எங்களின் தனிப்பட்ட முடிவு தான். எங்கள் பெற்றோர்கள் படிப்பு விஷயத்தில் எங்களை கட்டாயப்படுத்தியது இல்லை. நாங்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற ஆசையை அவர்கள் நிறைவேற்றினார்கள்” எனக் கூறியிருந்தனர்.