- Home
- Cinema
- போலீஸ் அடிச்சா சிரிக்குறான்... ரவுடிகளால் எங்க ஏரியாவுக்கு ஆபத்து - ஆதங்கத்தை கொட்டிய சந்தோஷ் நாராயணன்
போலீஸ் அடிச்சா சிரிக்குறான்... ரவுடிகளால் எங்க ஏரியாவுக்கு ஆபத்து - ஆதங்கத்தை கொட்டிய சந்தோஷ் நாராயணன்
திருத்தணியில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், போதையில் ரெளடிகள் செய்யும் அட்டகாசம் பற்றி தன் ஆதங்கத்தை கொட்டி உள்ளார் சந்தோஷ் நாராயணன்.

Santhosh Narayanan Shocking Post
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சில சிறுவர்கள் பட்டாக்கத்தியால் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்த அந்த நபரை மிரட்டி கட்டாயமாக இறக்கி, அருகிலுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமாக வெட்டியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த வடமாநில இளைஞர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தோஷ் நாராயணனின் பதிவு வைரல்
இந்தச் சம்பவத்திற்கு எதிராக, தமிழ்நாடு அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சமூக வலைதளமான எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக சென்னை நகரில் தான் வசித்து வரும் பகுதி, குறிப்பாக இரவு நேரங்களில், போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளால் மிகவும் ஆபத்தான பகுதியாக மாறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தனது ஸ்டுடியோ தளத்தில் பணிபுரியும் பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர்கள் சமீப காலங்களில் பலமுறை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் அளவுக்கு மீறிய போதையில் இருந்ததால், காவல்துறையின் தடியடியைக் கூட உணராமல் சிரித்தபடியே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் அரசியல் அமைப்புகளும் ஆதரவாக இருக்கிறார்கள்
மேலும், இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர் தீவிர இனவெறி மனப்பான்மை கொண்டவர்களாகவும், பிற மாநில மக்கள்மீது காரணமின்றி வெறுப்பை வெளிப்படுத்தி வன்முறையில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். இதைவிட கவலைக்கிடமான விஷயம், சில உள்ளூர் அரசியல் அமைப்புகளும், சாதி அடிப்படையிலான குழுக்களும், தங்கள் வாழ்க்கையை மட்டுமல்லாமல் பலரின் வாழ்க்கையையும் சீரழிக்கும் இளம் சிறுவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுயபரிசீலனை செய்யும் நேரம் இது
இந்த வன்முறை சம்பவங்களின் உண்மைகளை நாம் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு, இன்னும் பொறுப்புடன் மற்றும் நடைமுறை ரீதியாக செயல்பட்டால், பல உயிர்களை காப்பாற்ற முடியும் என அவர் வலியுறுத்தி உள்ளார். திரையுலகில் காட்டப்படும் வன்முறைக்கும், சமீப காலங்களில் நடக்கும் நிஜ வாழ்க்கை சம்பவங்களுக்கும் இடையிலான எல்லைகள் மெதுவாக அழிந்து வருவதாகவும், இது நம் அனைவரையும் சுயபரிசீலனை செய்ய வைக்கும் தருணம் எனவும், தன்னையும் சேர்த்தே அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

