ஹீரோவை தொடர்ந்து ஹீரோயினையும் மாற்றிய பாலா... வணங்கான் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?
வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில், தற்போது அப்படத்தில் இருந்து நடிகை கீர்த்தி ஷெட்டியையும் அதிரடியாக மாற்றி இருக்கிறாராம் பாலா.
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த திரைப்படம் வணங்கான். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்து வந்தது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கி கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது. சுமார் ஒரு மாதம் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவுக்கு வந்த பின் சூர்யாவுக்கும், பாலாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் வணங்கான் படத்தில் இருந்து சூர்யாவும் அவருடைய தயாரிப்பு நிறுவனமும் விலகுவதாக அறிவித்தார் இயக்குனர் பாலா.
சூர்யா விலகிய பின்னர் அப்படத்தை தானே தயாரிக்க முடிவெடுத்த பாலா, சூர்யாவுக்கு பதில் அருண்விஜய்யை ஹீரோவாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். முதலில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அவரே ஹீரோயினாக நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஹீரோயினையும் அதிரடியாக மாற்றி இருக்கிறார் பாலா.
இதையும் படியுங்கள்... Gopi sudhakar : கோபி, சுதாகரின் யூடியூப் சேனலுக்கு தடையா?... வடக்கன்ஸ் வீடியோவால் கிளம்பிய புது சிக்கல்
ரோஷினி பிரகாஷ்
அதன்படி வணங்கான் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் என்கிற இளம் நடிகையை நடிக்க வைக்க பாலா முடிவு செய்துள்ளாராம். நடிகை ரோஷினி பிரகாஷ் ஏற்கனவே தமிழில் ஜடா என்கிற திரைப்படத்தில் நடிகர் கதிருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி வணங்கான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
வணங்கான் படத்தின் படப்பிடிப்பை வருகிற மார்ச் 9-ந் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் பாலா. முதற்கட்டமாக கன்னியாகுமரியில் ஒரு மாதம் ஷூட்டிங்கை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் அருண்விஜய் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சந்தோஷ் நாராயணன் உடன் சண்டை... சார்பட்டா 2-விற்காக இசையமைப்பாளரை அதிரடியாக மாற்றும் பா.இரஞ்சித்?