விஜய் தேவரகொண்டா வீட்டில் போட்டோஷூட்; நெட்டிசன்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட ராஷ்மிகா!
நடிகை ராஷ்மிகா மந்தனா பதிவிட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் விஜய் தேவரகொண்டா வீட்டில் எடுக்கப்பட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

Rashmika Visit Vijay Deverakonda House
ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா இடையே காதல் இருப்பதாக சில ஆண்டுகளாக செய்திகள் பரவி வருகின்றன. அடிக்கடி இருவரும் ஜோடியாக காணப்படுவதும், டூர் செல்வதும் தான் இந்த ஊகங்களுக்கான காரணம். இருப்பினும், இதுவரை இந்த ஜோடி தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில், ராஷ்மிகா ஊடகங்களிடம் பேசுகையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அனைவருக்கும் தெரியும் என்று பதிலளித்தார். ஆனால் நேரடியாக விஜய் தேவரகொண்டாவின் பெயரைக் குறிப்பிடவில்லை.
ராஷ்மிகாவின் சூசக பதிவு
சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா பதிவிட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மீண்டும் பேசுபொருள் ஆகி உள்ளன. அவர் பதிவிட்ட புகைப்படங்கள் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் எடுக்கப்பட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக அவர் குறிப்பிட்டுள்ள தலைப்பைப் பார்த்தால், ராஷ்மிகா மறைமுகமாக விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது குடும்பத்தினரைக் குறிப்பிடுகிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ராஷ்மிகாவுக்கு சேலை பரிசளித்தது யார்?
ராஷ்மிகா தனது பதிவில், “இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தமானவற்றுடன் நிறைந்துள்ளன.. அந்த நிறம், அந்த சூழல், அந்த இடம், ஒரு அழகான பெண் எனக்கு பரிசளித்த இந்த சேலை, இந்த புகைப்படங்களை எடுத்த நபர், இப்படி இதில் உள்ள ஒவ்வொரு விஷயமும் வாழ்க்கையில் ஈடுசெய்ய முடியாதவை” என்று குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகாவுக்கு அந்த சேலையை பரிசளித்தது விஜய் தேவரகொண்டாவின் தாய் என்று நெட்டிசன்கள் கருதுகின்றனர். புகைப்படங்களை எடுத்தவர் விஜய் தேவரகொண்டா என்றும் கூறுகின்றனர்.
நெட்டிசன்களிடம் சிக்கிக் கொண்ட ராஷ்மிகா
நெட்டிசன்களின் சந்தேகத்திற்கு ஒரு காரணம் உள்ளது. ரஷ்மிகா அமர்ந்திருக்கும் இடம் விஜய் தேவரகொண்டாவின் வீடு என்பதற்கான குறிப்பு உள்ளது. முன்னதாக, விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் ரஷ்மிகா, பரசுராம் இருக்கும் புகைப்படம் வைரலானது. அதில் உள்ள பின்னணியும், இப்போது ராஷ்மிகா பதிவிட்ட புகைப்படங்களில் உள்ள பின்னணியும் ஒரே மாதிரியாக உள்ளது. அதனால்தான் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் தான் இருக்கிறார் என்று அனைவரும் நினைக்கிறார்கள்.
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா நடித்த படங்கள்
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடியாக முதன்முதலில் 2018 ஆம் ஆண்டு கீதா கோவிந்தம் படத்தில் நடித்தனர். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான டியர் காம்ரேட் படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த இரண்டு படங்களும் அவர்களது ஜோடி மீது ரசிகர்களிடையே ஒரு தனிப்பட்ட அன்பை ஏற்படுத்தின. விஜய் தேவரகொண்டா தற்போது கிங்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.