Mysaa : ஃபிளவர் இல்ல... ஃபயர் மோடில் நடிகை ராஷ்மிகா! மிரள வைக்கும் மைசா பர்ஸ்ட் லுக்
ராஷ்மிகா மந்தனா ஆக்ஷன் ஹீரோயினாக டெரர் லுக்கில் காட்சியளிக்கும் மைசா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rashmika's Mysaa First Look
தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தனது திறமையை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த ராஷ்மிகா தற்போது தனது அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன்படி அவர் கதையின் நாயகியாக நடிக்கும் 'மைசா' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ராஷ்மிகா மிகவும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். மூக்கில் நெத்திச்சுட்டி, கையில் கத்தி, கண்களில் கோபம் என ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அவரது தோற்றம் அமைந்துள்ளது. இப்படத்தை ரவீந்திரா புல்லே இயக்கி உள்ளார்.
'மைசா' படத்தின் பர்ஸ்ட் லுக்
ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'மைசா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து, 'எப்போதும் புதிதாக, வித்தியாசமாக, சுவாரஸ்யமாக ஏதாவது ஒன்றை உங்களுக்கு வழங்க முயற்சிப்பேன். இதுவும் அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான். இதுவரை நான் ஏற்று நடிக்காத ஒரு கதாபாத்திரம். நான் இதுவரை கால் வைக்காத ஒரு புதிய உலகம். இதுவரை நான் சந்திக்காத என்னுடைய புதிய முகம். இது பயங்கரமானது. நான் மிகவும் பதட்டமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். நாங்கள் என்ன உருவாக்கப் போகிறோம் என்பதை நீங்கள் எப்போது பார்ப்பீர்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். இது வெறும் ஆரம்பம்தான்' என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அனுஷ்கா, நயன்தாரா பாணியில் ராஷ்மிகா
'மைசா' படத்தில் ராஷ்மிகாவின் கம்பீரமான தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அனுஷ்கா ஷெட்டியின் தோற்றத்தை இது நினைவூட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அனுஷ்கா பிறந்தநாளில் அவரது 'காட்டி' படத்தின் தோற்றம் வெளியிடப்பட்டது. ராஷ்மிகாவின் தோற்றமும் அதேபோல் இருப்பதாக ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர். அதேபோல் ராக்காயி படத்தில் நயன்தாராவும் இதேபோல் ஒரு லுக்கில் இருந்ததையும் ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள். 'மைசா' படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், ராஷ்மிகா அசத்திவிட்டதாகவும், இன்னொரு பிளாக்பஸ்டர் படம் வரவிருப்பதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ராஷ்மிகாவின் கைவசம் உள்ள படங்கள்
ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறார். 'அனிமல்', 'புஷ்பா 2', 'சாவா' ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இருப்பினும், இந்த ஆண்டு சல்மான் கானுடன் அவர் இணைந்து நடித்த 'சிக்கந்தர்' படம் படுதோல்வியடைந்தது. இதையடுத்து தனுஷுடன் ராஷ்மிகா நடித்திருந்த குபேரா திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்த வெற்றிநடைபோட்டு வருகிறது. 'மைசா' தவிர, ராகுல் ரவீந்திரன் இயக்கும் 'தி கேர்ள்ஃப்ரெண்ட்', சாந்தருபனின் 'ரெயின்போ' ஆகிய படங்களிலும் ராஷ்மிகா கதையின் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.