‘லப்பர் பந்து’ தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாகும் ரம்யா கிருஷ்ணன் - ஹீரோ யார் தெரியுமா?
Ramya Krishnan Bags Lead Role in Lubber Pandhu Remake: தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற லப்பர் பந்து படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ள பிரபலங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

லப்பர் பந்து:
கடந்த ஆண்டு தமிழில் வெளியான தமிழரசன் பச்சமுத்து இயக்கிய லப்பர் பந்து திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, சஞ்சனா ஆகியோர் நடித்த இந்த படம் உணர்ச்சியும் நகைச்சுவையும் கலந்த கதைக்களத்தில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்றது. வெளியான சில நாட்களிலேயே படம் டிரெண்டிங்காகி இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.
ஷாருக்கான் காட்டிய ஆர்வம்:
படம் வெற்றி பெற்றதையடுத்து, இதை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின. குறிப்பாக ஹிந்தியில் இந்த படத்தை மறுபடியும் உருவாக்க நடிகர் ஷாருக்கான் கூட ஆர்வம் காட்டியதாக தகவல்கள் வெளியாகி, படத்திற்கான கவனம் மேலும் அதிகரித்தது.
கூடிய எதிர்பார்ப்பு:
இந்த நிலையில், லப்பர் பந்து படத்தின் தெலுங்கு ரீமேக் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ‘நின்னிலா நின்னிலா’ படத்தை இயக்கிய அனி ஐ.வி. சசி இந்த படத்தை ரீ மேக் செய்ய உள்ளனர். அவரது தனித்துவமான காட்சிப்படுத்தும் திறன் காரணமாக தெலுங்கில் இந்த ரீமேக்கிற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
தெலுங்கு ரீ-மேக்:
தெலுங்கு ரீ-மேக்கில் அட்டகத்தி தினேஷ் நடித்த கதாபாத்திரத்தில், தெலுங்கு நடிகர் ராஜசேகர் நடிக்கிறார். அனுபவம் நிறைந்த நடிகர் ராஜசேகர் என்பதால், இந்த கதாபாத்திரத்தை எப்படி புது கோணத்தில் உயிர்ப்பிக்கிறார் என்பதில் ரசிகர்கள் பெரிய ஆவல் காட்டுகின்றனர். அதே போல் சுவாசிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க கமிட் ஆகி உள்ளார். எந்த ஒரு கதாப்பாத்திரத்தையும் கட்சிதமாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் இந்த படத்திற்குள் வந்துள்ளது படத்தின் படமாகவே பார்க்கப்படுகிறது.
ரியல் அப்பா - மகள் நடிக்கிறார்கள்:
மேலும் சஞ்சனா நடித்த பாத்திரத்தில், ராஜசேகர் அவர்களின் மகள் சிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார். இந்த கூட்டணி திரைப்படத்துக்கு புதிய வலு சேர்க்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனினும் ஹரிஷ் கல்யாண் நடித்த கதாபாத்திரத்துக்கு நடிகர் தேர்வு இன்னும் உறுதியாகவில்லை. சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. தொடக்க நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. படக்குழு விரைவில் கதாநாயகன் குறித்த அறிவிப்பையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு ரசிகர்களை கவருமா?
லப்பர் பந்து தெலுங்கு ரீமேக் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உயரும் நிலையில், இந்த படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது போலவே தெலுங்கு ரசிகர்களை கவருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.