பைசன் படம் பார்த்து ரஜினிகாந்த் கொடுத்த ‘சூப்பர்’ ரிவ்யூ... பூரித்துப்போன மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் பைசன் காளமாடன் திரைப்படத்தை பார்த்து பாராட்டி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

Rajinikanth Praises Bison Movie
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்த படம் பைசன் காளமாடன். இப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக பா.இரஞ்சித் தயாரித்துள்ளார். இப்படம் மணத்தி கணேசன் என்கிற கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். மேலும் ரெஜிஷா விஜயன், லால், அமீர், பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருந்தார். இப்படம் தீபாவளி விருந்தாக அக்டோபர் 17ந் தேதி திரைக்கு வந்தது.
பைசன் படத்தின் கதை
90 களில் தென் மாவட்டங்களில் மிக மோசமாக சாதிய படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழல். வழக்குகளோடு இரு தரப்பிலும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என குடித்தனம் நடத்துகின்ற வாழ்நிலையில், கபடி வீரனான தலித் இளைஞன் ஒருவன் கபடி போட்டியில் தேசிய அளவில் பங்கேற்று அர்ஜூனா விருது பெறுவது தான் கதைக்களம். உள்ளூரில் நடக்கும் சாதிக்குழுக்களின் மோதல்கள் குறித்த எதுவுமே தெரியாமல் கபடி ஒன்றையே உயிர் மூச்சாக கொண்டிருந்த ‘கிட்டான்’ என்கிற கேரக்டரில் தான் துருவ் விக்ரம் நடித்திருந்தார்.
வசூல் வேட்டையாடும் பைசன்
கம்மியான பட்ஜெட்டில் உருவான பைசன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆன ஐந்து நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடைபோட்டு வருகிறது. துருவ் விக்ரமுக்கு கிடைத்த முதல் வெற்றி பைசன் தான். இப்படத்திற்கு எதிர்ப்புகள் ஒருபுறம் வந்தாலும், பிரபலங்கள் பலரும் பைசன் திரைப்படத்தை பார்த்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், ரஜினிகாந்த், பைசன் படம் பார்த்து மாரி செல்வராஜுக்கு போன் போட்டு வாழ்த்தி உள்ளார்.
ரஜினிகாந்த் வாழ்த்து
'சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன், படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் ‘ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாரி செல்வராஜ். மேலும் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் மாரி.