OTTயில் ரிலீஸ் ஆன கூலி படத்தின் லைஃப் டைம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு? லியோவை முந்தியதா?
Coolie : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று முதல் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் லைஃப் டைம் வசூலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Coolie Movie OTT Release
ரஜினிகாந்தின் அதிரடி ஆக்ஷன் படமான 'கூலி' திரையரங்குகளில் வெளியாகி 29 நாட்களுக்குப் பிறகு OTT தளத்தில் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாக சறுக்கினாலும் வசூல் ரீதியாக வெற்றிநடை போட்டது. இப்படத்தில் தேவா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவாளராக கிரீஷ் கங்காதரனும், படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜும் பணியாற்றி இருந்தனர். இது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படமாகும். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது.
'கூலி' எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் செப்டம்பர் 11 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஆமிர் கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், ரசிதா ராம், ரேபா மோனிகா ஜான், மோனிஷா பிளஸ்ஸி, கண்ணா ரவி, ரவி ராகவேந்திரா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பூஜா ஹெக்டே 'மோனிகா' பாடலுக்கு நடனமாடி உள்ளார். மகேஷ் மஞ்ச்ரேக்கர், ஆமிர் கானின் தந்தையாக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இது பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட்டது.
'கூலி' படத்தின் பட்ஜெட்
கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் சார்பில் 'கூலி' படத்தை தயாரித்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்தின் பட்ஜெட் ரூ.350 முதல் 400 கோடி வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் ரஜினிகாந்தின் சம்பளம் மட்டும் ரூ.150 கோடி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ.50 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம், வாங்கும் இயக்குனராக உருவெடுத்தார் லோகேஷ். இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்த ஆமிர் கான் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை.
'கூலி' படத்தின் மொத்த வசூல்
கூலி திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ.65 கோடி வசூலித்தது. ஆனால் அதன் பிறகு வசூல் சரிந்தது. வார இறுதியில் ரூ.159.25 கோடியும், முதல் வாரத்தில் ரூ.229.65 கோடியும் வசூலித்தது. இரண்டாவது வாரத்தில் ரூ.41.85 கோடி மட்டுமே வசூலித்தது. 25 நாட்களில் இந்தியாவில் ரூ.284.47 கோடி வசூல் ஈட்டிய இப்படம், உலகளவில் ரூ.514.65 கோடி வசூலித்தது. 1000 கோடி வசூல் கனவுடன் ரிலீஸ் ஆன கூலி படத்திற்கு அதில் பாதி வசூல் தான் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி இப்படம் லியோ பட வசூல் சாதனையையும் முறியடிக்கவில்லை. லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.610 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.