"சின்மயி பாட நான் தடை விதிக்கவில்லை.. இதுதான் நடந்தது" உண்மைகளை உடைத்த ராதா ரவி
பாடகி சின்மயி பாடுவதற்கு தடை விதித்த விவகாரத்தில் நடந்ததே வேறு என்று நடிகர் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் சின்மயிக்கு தடை
‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் வரும் “ஒரு தெய்வம் தந்த பூவே..” என்கிற பாடலை பாடியதன் மூலமாக தமிழ் திரையுலகுக்கு பின்னணி பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. அதன் பின்னர் பல நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் பாடல்களை பாடி இருக்கிறார். மேலும் முன்னணி நடிகைகளுக்கு பின்னணி பேசும் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வந்தார். இவருக்கு தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக பாடுவதற்கும், டப்பிங் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சின்மயி பாடிய “முத்த மழை..” பாடல்
சின்மயி ஒரு திறமையான பின்னணி பாடகி ஆவார். இவரது குரலில் ஒரு வசீகரம் இருக்கும். ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் வரும் “முத்த மழை..” என்கிற பாடலை ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடினார். ஆனால் இந்தப் பாடலை படத்தில் பிரபல பின்னணி பாடகி தீ பாடியிருந்தார். தீ ஆல் தீயால் இசை வெளியீட்டு விழாவிற்கு வர முடியாத காரணத்தினால் சின்மயி பாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும் சின்மயி பாடிய வெர்ஷனே நன்றாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் தெரிவித்து இருந்தனர். மேலும் சமூக வலைத்தளங்களை திறந்தாலே, சின்மயி பாடிய “முத்த மழை..” பாடலின் ரிலீஸ்களே காணப்பட்டன. இவ்வளவு நன்றாக பாடும் சின்மயிக்கு ஏன் தமிழ் திரையுலகில் ஏன் தடை விதிக்கப்பட்டது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
ராதா ரவி மீது குற்றச்சாட்டு
டப்பிங் யூனியனுக்கு ஆண்டு சந்தா கட்டவில்லை என்கிற காரணத்தால் சின்மயி பாடுவதற்கும், டப்பிங் பேசுவதற்கும் அப்போதைய நடிகர் சங்க செயலாளர் மற்றும் டப்பிங் யூனியன் தலைவராக இருந்த ராதா ரவி தடை விதித்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இருப்பினும் வைரமுத்து மீது சின்மயி வைத்த பாலியல் ரீதியான புகார்களே சின்மயி தடை செய்யப்பட்டதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ராதா ரவி சின்மயி தடை குறித்து பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.
சின்மயி தடை பற்றி ராதா ரவி விளக்கம்
அவர் கூறியதாவது, “சின்மயி பாடுவதற்கு நான் தடை விதித்ததாக சிலர் கூறுகிறார்கள். அதில் உண்மை கிடையாது. நான் டப்பிங் யூனியனுக்கு மட்டுமே தலைவராக இருந்தேன். ஆனால் சின்மயி பாடுவதற்கு தடை விதித்தவர்கள் மியூசிக் யூனியன் தான். மியூசிக் யூனியனுக்கும், டப்பிங் யூனியனுக்கும் சம்பந்தம் கிடையாது. திரைத்துறையில் 200-க்கும் மேற்பட்ட யூனியன்கள் இருக்கும் நிலையில் டப்பிங் யூனியன் வேறு, மியூசிக் யூனியன் வேறு என்பது கூட தெரியாமல் சிலர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதை வேண்டுமானாலும் பேசிக்கொண்டு போகட்டும். அவர்கள் இஷ்டத்திற்கு ஏதோ பேசுகிறார்கள். அதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்” என கேள்வி எழுப்பினார்.
சின்மயி டப்பிங் பேச மட்டுமே தடை விதித்தேன் - ராதா ரவி
“தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அதுபோலத்தான் ஒவ்வொரு இடத்திலும் சின்மயி பாடுவதற்கு நான் தடை விதித்ததாக என்னிடம் இந்த கேள்வியை கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பாடுவதற்கு தடை போட்டு இருந்தால் அதை மியூசிக் யூனியன் தான் கேட்க முடியும்” என ராதா ரவி கூறி இருக்கிறார்.
முன்பு ஒரு பேட்டியில் இது குறித்து பேசியிருந்த ராதாரவி, “டப்பிங் யூனியனுக்கு செலுத்த வேண்டிய ஆண்டு சந்தா தொகையை செலுத்துவதற்கு பதிலாக சின்மயி நீதிமன்றத்தை நாடியதால் பிரச்சனை வேறு திசையில் சென்று, அவருக்கு தடை விதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது” என கூறியிருந்தார்.