சின்மயிக்கு கடந்த 6 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் பாட்டுப் பாட தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்காக ஏன் மன்னிப்பு கேட்கவில்லை என அவரே விளக்கம் அளித்துள்ளார்.

Singer Chinmayi : பிரபல பின்னணிப் பாடகி சின்மயி ஸ்ரீபாதா தனது தொழில் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அதிலிருந்து மீண்டு வந்து சாதித்து வருவது குறித்து அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' படத்தில் இடம்பெற்றுள்ள 'முத்த மழை' பாடலை சின்மயி ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடியது வைரலானதை அடுத்து, தனது மனதின் வலியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார்.

'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று, பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்த எதிர்பாராத வரவேற்பால் நெகிழ்ந்து போன சின்மயி, தனது ஆறு வருட போராட்டத்தை நினைவுகூர்ந்து, நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

கண்ணீர் சிந்திய சின்மயி

சின்மயி தனது பதிவில், "'தக் லைஃப்' பாடலின் ஆடியோ வெளியீட்டு வீடியோ வைரலானபோது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவில் எதிர்கொண்டு வரும் தடையைப் பற்றி உங்களுக்குத் தெரியும். இந்தக் காலகட்டத்தில் எண்ணற்ற கோயில்களில் கண்ணீர் வடித்துள்ளேன். கடவுளிடம் அழுதுவிட்டு, வெளியே வந்ததும் துணிச்சலான பெண் போல நடித்து நடந்துள்ளேன். என் பிரார்த்தனைகளுக்கு கடவுள் எப்போது செவிசாய்ப்பார் என்று காத்திருந்தேன்," என்று தனது வலியைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், "இந்தப் பாடலின் வெற்றி என்னுடைய பிரார்த்தனைக்கு கிடைத்த வெற்றி போல உணர்கிறேன். இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் இயக்குநர் மணிரத்னம் சார் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி, என் குரலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியதற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்," என்று நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கேட்க மறுத்த சின்மயி

அதேபோல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு விதிக்கப்பட்ட தடை பற்றி பேசி இருந்தார் சின்மயி. அதன்படி, “நான் சந்தா கட்டவில்லை என்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கியதாக சொன்னார்கள். ஆனால் உண்மை காரணம் நான் மீடூவில் பேசியது தான். எனக்கு தடை விதிக்கப்பட்டது கடிதம் வாயிலாக தான் வந்தது. திரும்ப சேர வேண்டும் என்றால் மன்னிப்பு கேட்கணும்னு சொன்னாங்க. அது அவரு காலில் விழ வேண்டும் என நிறைய புரொசிஜர் இருக்கு. அதனால் நான் முடியாதுனு சொல்லிட்டேன். ஒரு வாரம் முன்பு கூட மன்னிப்பு கடிதம் கொடுக்க சொன்னாங்க. நான் ஏன் கேட்கணும். அதெல்லாம் முடியாதுனு சொல்லிவிட்டேன்” என சின்மயி தெரிவித்துள்ளார்.

2018-ம் ஆண்டு '#MeToo' இயக்கத்தின்போது, பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார் சின்மயி. இதையடுத்து, தமிழ் சினிமாவில் அவருக்கு பாடும் வாய்ப்புகள் முற்றிலுமாக நின்று போயின. டப்பிங் யூனியனிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும், தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராகவும், பாடகியாகவும் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் பிரபல இயக்குநர் இணைந்து சின்மயிக்கு வாய்ப்பு வழங்கியிருப்பது அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. முத்த மழை வெறும் ஒரு பாடல் மட்டுமல்ல, குரல் கொடுத்தவர்களின் வெற்றி என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.