மொழி கடந்து தொடரும் வசூல் வேட்டை... அஜித், சூர்யா பட சாதனைகளை அசால்டாக தட்டித்தூக்கி கெத்து காட்டும் லவ் டுடே
தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட லவ் டுடே திரைப்படம் தற்போது தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்பட்டு அங்கும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
முன்பெல்லாம் தங்கள் மொழிகளில் ஏதேனும் படங்கள் ஹிட்டானால் அதனை பிற மொழிகளில் ரீமேக் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் சமீப காலமாக ஏதேனும் ஒரு மொழி படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றால், அதனை உடனடியாக பிறமொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு விடுகின்றனர்.
அந்த வகையில், கடந்த மாதம் கன்னட மொழியில் மட்டும் வெளியாகி சக்கைப்போடு போட்ட காந்தாரா, திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இதன் காரணமாக வெறும் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ.400 கோடி வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது.
இதையும் படியுங்கள்... அஜித் உடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோ உடன் இன்ஸ்டாகிராமில் எண்ட்ரி கொடுத்த ஷாலினி - அதற்குள் இத்தனை பாலோவர்களா.!
இந்நிலையில், தற்போது அதே பார்முலாவை லவ் டுடே படக்குழுவும் பின்பற்றி உள்ளது. தமிழில் கடந்த நவம்பர் 4-ந் தேதி ரிலீசான இப்படம் இளசுகள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி மூன்று வாரங்களை கடந்தும் தமிழகத்தில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்திற்கு கிடைத்து வரும் ஏகோபித்த வரவேற்பை பார்த்த வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு, இதன் டப்பிங் உரிமையை வாங்கி தெலுங்கில் டப் செய்து வெளியிட்டார்.
நேற்று முன்தினம் ரிலீசான இப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். இப்படம் ரிலீசான இரண்டே நாளில் 4.5 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் அஜித்தின் வலிமை படம் தெலுங்கில் வெளியான முதல் நாளில் ரூ.1.7 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. அதேபோல் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரூ.1.8 கோடி வசூலித்திருந்தது. தற்போது முதல் படத்திலேயே இவர்களையெல்லாம் ஓரங்கட்டி உள்ள பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் தெலுங்கில் ரிலீசான முதல் நாளில் ரூ.2.5 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 3 வயதில் சினிமா எண்ட்ரி முதல் காதல் திருமணம் வரை... மஞ்சிமா மோகன் பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய பின்னணி