முதல் படத்திலேயே முன்னணி ஹீரோக்களுக்கு இணையான கலெக்ஷன்... வியக்க வைக்கும் லவ் டுடே படத்தின் முதல் நாள் வசூல்
ரிலீசானது முதல் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் லவ் டுடே திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
குறும்பட இயக்குனரான பிரதீப் ரங்கநாதன், கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். பல ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த ஒருவர் அதிலிருந்து மீண்ட பின்னர் என்னென்ன பிரச்சனையெல்லாம் எதிர்கொள்கிறார் என்பதை காமெடி கலந்து சொல்லி இருந்தார் பிரதீப். புதுவிதமான கதையம்சத்தை கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் இரண்டாவது இயக்கிய படம் தான் லவ் டுடே. இப்படத்தின் மூலம் அவர் நடிகராகவும் அவதாரம் எடுத்து இருந்தார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமான இதில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும் ராதிகா, சத்யராஜ், யோகிபாபு, ரவீனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
இதையும் படியுங்கள்... கிரிக்கெட் கதைக்களம்... முதன்முறையாக மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் மாஸான டைட்டில் இதோ
ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. முதல் ஷோவில் இருந்தே இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. படம் பார்த்தவர்கள் எல்லாம் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது என சொல்லும் அளவுக்கு படத்தில் காமெடி காட்சிகள் வேற லெவலில் இருப்பதாக தொடர்ந்து விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
இப்படி முதல் நாளே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்துள்ளது. முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக இப்படத்திற்கு முதல் நாள் வசூல் கிடைத்துள்ளது. அதன்படி லவ் டுடே திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.4.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... 2022-ல் அதிக பிளாக்பஸ்டர் ஹிட் யாருக்கு? முதலிடத்தில் கோலிவுட்... பரிதாப நிலையில் பாலிவுட் - முழு பட்டியல் இதோ