2022-ல் அதிக பிளாக்பஸ்டர் ஹிட் யாருக்கு? முதலிடத்தில் கோலிவுட்... பரிதாப நிலையில் பாலிவுட் - முழு பட்டியல் இதோ
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டு சினிமா துறை கடுமையான பாதிப்பை சந்தித்தது. இந்த ஆண்டு தான் சினிமா துறை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. அனைத்து மொழிகளிலும் இந்த வருடம் ஏராளமான படங்கள் ரிலீசாகி உள்ளன. அதில் கடந்த 10 மாதங்களில் அதிக பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த திரையுலகம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1. கோலிவுட் (தமிழ்)
2022-ல் அதிக பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த திரையுலகம் கோலிவுட் தான். தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ரிலீசான சிவகார்த்திகேயனின் டான், கமலின் விக்ரம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், தனுஷின் திருச்சிற்றம்பலம், கார்த்தியின் சர்தார் ஆகிய 5 படங்கள் பிரம்மாண்ட வெற்றியை பெற்றதோடு வசூலையும் வாரிக்குவித்தது. மேற்கண்ட 5 படங்களில் நான்கு படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
2. டோலிவுட் (தெலுங்கு)
அதிக பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த திரையுலகம் பட்டியலில் டோலிவுட் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் இந்த வருடம் ரிலீசான ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர், கார்த்திகேயா, துல்கர் சல்மானின் சீதா ராமம் மற்றும் பிம்பாஸ்ரா ஆகிய நான்கு திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன. இதில் ஆர்.ஆர்.ஆர் படம் மட்டும் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அடுத்த ‘ஆலுமா டோலுமா’ ரெடி... துணிவு படத்துக்காக அனிருத் பாடிய மாஸ் பாடலின் அப்டேட் வந்தாச்சு
3. சாண்டல்வுட் (கன்னடம்)
சாண்டல்வுட் என்கிற கன்னட திரையுலகம் தான் இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டு கன்னடத்தில் ரிலீசான கே.ஜி.எஃப். 2, காந்தாரா, 777 சார்லி ஆகிய மூன்று திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன. குறிப்பாக கே.ஜி.எஃப் 2 திரைப்படம் மட்டும் ரூ.1250 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்திய அளவில் இந்த ஆண்டு ரிலீசான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
4. மல்லுவுட் (மலையாளம்)
அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுக்கும் மலையாள திரையுலகம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. மலையாள திரையுலகில் இந்த ஆண்டு ரிலீசான பிருத்விராஜின் ஜன கண மன, மம்முட்டியின் பீஷ்மா, பிரணவ் மோகன்லால் நடித்த ஹிருதயம் ஆகிய மூன்று படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் பட்டியலில் இடம்பெற்று உள்ளன.
5. பாலிவுட் (இந்தி)
பாலிவுட் திரையுலகம் தான் இந்த ஆண்டிலேயே குறைவான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த திரையுலகம். அங்கு இந்த வருடம் ரிலீசான 90 சதவீத படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன. அதில் காஷ்மீர் பைல்ஸ், பூல் புலையா 2, பிரம்மாஸ்திரா ஆகிய மூன்று படங்கள் மட்டுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதுவரை பாக்ஸ் ஆபிஸ் என்றாலே பாலிவுட் படங்கள் தான் என்று இருந்த நிலை இந்த ஆண்டு அப்படியே தலைகீழாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சறுக்கிய டாப் ஹீரோஸின் படங்கள்... பரிதாப நிலையில் பாலிவுட் - இந்த வருடம் மட்டும் இத்தனை பிளாப் படங்களா..!