பொன்னியின் செல்வனாக பிரதிபலிக்க என்ன தவம் செய்தேனோ... சதய விழா குறித்து ரீல் ராஜ ராஜசோழன் நெகிழ்ச்சி
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜ ராஜசோழனாக நடித்திருந்த நடிகர் ஜெயம் ரவி, சதய விழா குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
சோழ மன்னரான ராஜ ராஜசோழனின் சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால் அந்நாளை சதய நாளாக கொண்டாடி வருகின்றனர். இனி ஆண்டுதோறும் ராஜ ராஜ சோழனின் சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ராஜ ராஜ சோழனின் 1037-வது சதய விழாவை ஒட்டி அவர் கட்டிய வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோவில் விழாக்கோலம் பூண்டு இருந்தது. ஏராளமான மக்கள் அக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு சற்று கூட்டம் அதிகமாகவே இருந்ததாம். இதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் திரைப்படம் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மாமன்னர் ராஜராஜசோழன் 1,037 சதயவிழா.. முதலமைச்சர் வெளியிட்டு சூப்பர் அறிவிப்பு.. தெரிந்துக்கொள்ள வேண்டியவை
சோழர்களின் ஆட்சிக்காலம் பற்றியும், ராஜ ராஜசோழன் பற்றியும் அப்படத்தில் கூறி இருந்தனர். அப்படம் ரிலீசான பின்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சதய விழாவிலும் அந்த படம் ஏற்படுத்திய தாக்கத்தால், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் மாமன்னர் ராஜ ராஜசோழனாக நடித்திருந்த ஜெயம் ரவி, சதய விழா குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “ராஜ ராஜசோழனுக்கு சதய விழா. இவரது புகழையும், பெருமையும் போற்றி, அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்து பெருமை கொள்வோம். பொன்னியின் செல்வனாக “திரையில் உம்மை பிரதிபலிக்க" நான் என்ன தவம் செய்தேனோ” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... தமிழ் - இந்தி மொழியில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் உளவியல் திரில்லரான 'மாணிக்'!