வரிசையாக 6 பெரிய பட்ஜெட் படங்கள்... பல நூறு கோடிகளை வாரி இறைத்த லைகா - 2022 போல் 2023-லும் தட்டிதூக்குமா?
பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து லைகா நிறுவனம் அடுத்தடுத்து 6 பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது லைகா. அந்நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தது. அந்நிறுவனத்துக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது. அவர்கள் தயாரித்த கத்தி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இதையடுத்து கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம், 2.0, வட சென்னை என ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு ஹிட் படங்களை கொடுத்து வந்த லைகா நிறுவனத்துக்கு 2022-ம் ஆண்டு ஒரு மறக்க முடியாத ஆண்டாக மாறியது. ஏனெனில் அந்நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன், டான் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.
குறிப்பாக டான் படம் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்தது. அதேபோல் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி இண்டஸ்டிரி ஹிட் என அறிவிக்கப்பட்டது. இதுதவிர இந்த ஆண்டு லைகா நிறுவனம் வெளியிட்ட ஆர்.ஆர்.ஆர், சீதா ராமம் போன்ற படங்களும் பிரம்மாண்ட வெற்றிப்படங்களாக அமைந்தன.
இவ்வாறு 2022-ம் ஆண்டு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, லால் சலாம், சந்திரமுகி 2 மற்றும் ஏகே 62, தலைவர் 171 ஆகிய 6 பெரிய பட்ஜெட் படங்களில் முதலீடு செய்து தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். இதில் பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... எலிமினேட் ஆன போட்டியாளரை மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக களமிறக்கும் பிக்பாஸ்... டி.ஆர்.பி எகிறப்போகுது..!
இதையடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது லைகா. அதேபோல் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாராகும் இப்படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடிக்கிறார்.
லைகா நிறுவனத்தின் மற்றொரு பெரிய பட்ஜெட் படமான ஏகே 62-வை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இப்படத்தில் அஜித் நாயகனாக நடிக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. மேலும் பி.வாசு - ராகவா லாரன்ஸ் கூட்டணியில் உருவாகும் சந்திரமுகி 2-ம் பாகத்தையும் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது லைகா.
இதுதவிர ரஜினியின் 171-வது படத்தையும் லைகா தான் தயாரிக்கிறது. இப்படத்தை லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு வரிசையாக 6 பெரிய பட்ஜெட் படங்களில் பல நூறு கோடிகளை வாரி இறைத்து தயாரித்து வரும் லைகாவுக்கு 2022-ம் ஆண்டைப் போல் 2023-ம் ஆண்டும் வெற்றிகரமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... திரிஷா - சன்னி லியோன் படங்கள் மோதல்! இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ