இளையராஜாக்கு போட்டியா இறக்கிவிடப்பட்ட 2 குதிரைகளும் ஆஸ்கர் அடிச்சிருச்சு! ARR, கீரவாணிக்கு இப்படிஒரு ஒற்றுமையா
ஆஸ்கர் விருது வென்ற இந்தியாவை சேர்ந்த இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரகுமானுக்கும், கீரவாணிக்கும் உள்ள ஒற்றுமையை பற்றி தற்போது பார்க்கலாம்.
95-வது ஆஸ்கர் விருது விழா நேற்று நடைபெற்றது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதுதவிர தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்கிற இந்தியாவின் ஆவண குறும்படமும் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்தது. இந்தியர்களின் கனவாக இருந்த ஆஸ்கர் தற்போது நனவாகி உள்ளதால், ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த தருணத்தை கொண்டாடி வருகிறது. ஆஸ்கர் விருது வென்ற இருவருக்கும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.
இதற்கு முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக கடந்த 2009-ம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார். இதற்கு அடுத்தபடியாக கீரவாணி தற்போது வென்று அசத்தி இருக்கிறார். இருப்பினும் ஸ்லம்டாக் மில்லியனர் இந்திய படம் இல்லை என்பதால், இந்திய படத்துக்காக ஆஸ்கர் வென்ற முதல் இசையமைப்பாளர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார் கீரவாணி என்கிற மரகதமணி.
ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமான் மற்றும் கீரவாணி இருவருக்குமே ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் இவர்கள் இருவரையும் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியது இயக்குனர் கே.பாலச்சந்தர் தான். இவர் நடத்தி வரும் கவிதாலயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த படங்கள் மூலம் தான் ஏ.ஆர்.ரகுமான், கீரவாணி இருவருமே அறிமுகப்படுத்தப்பட்டனர்.
இதையும் படியுங்கள்... Oscar 2023 Gift Bag: ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்தவர்களுக்கும் எக்கச்சக்க பரிசுகள்! என்னென்ன தெரியுமா?
ஏ.ஆர்.ரகுமானை தான் தயாரித்த ரோஜா படம் மூலம் அறிமுகப்படுத்தினார் பாலசந்தர். அதேபோல் கீரவாணியை தனது இயக்கத்தில் வெளிவந்த வானமே எல்லை படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். கீரவாணி இசையமைப்பில் வெளியான முதல் படம் அழகன் என்றாலும், அவர் முதன்முதலில் கமிட் ஆன படம் வானமே எல்லை.
இவர்கள் இருவரையும் பாலசந்தர் அறிமுகப்படுத்தியது ஏன் தெரியுமா. அந்த சமயத்தில் டாப் இசையமைப்பாளராக இருந்தது இளையராஜா தான். அவருடன் சேர்ந்து பாலசந்தர் பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், ஒருகட்டத்தில் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக, அவருக்கு பதிலாக இறக்கிவிடப்பட்ட இரண்டு குதிரைகள் தான் ஏ.ஆர்.ரகுமானும், கீரவாணியும், அந்த இருவருமே தற்போது ஆஸ்கர் வென்றிருப்பதை ரசிகர்கள் பெருமையுடன் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஆஸ்கர் விருது பரபரப்புக்கு நடுவே ‘தி பினோமினல் ஷி’ விருது பெற்ற முதல் தமிழ் நடிகை லிசி ஆண்டனி!